குரு சீடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குரு சீடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 19, 2009

குரு சீடன்


குயவன் கையில்
களிமண்ணைப் போல்
குருவிடம் சீடன்…!

களிமண்ணை
குழைத்து
வளைத்து
நெளித்து
உருவகப்படுத்துகிறான்
குயவன்…

பொறுமை
போதனை
சோதனையைக் கொண்டு
பக்குவப்படுத்துகிறார்
குரு…

குருவின் கையில்
களிமண்ணாக
சீடன் இருந்தால்தான்
பொருளாக முடியும்.
பொருளாகவே குருவிடம் சென்றால்
அந்தபொருளுக்கு
பொருள் இருக்காது
அருள் இருக்காது
நயமிருக்காது
நளினமுமிருக்காது.

கடைந்த பாத்திரங்களை
ஈரம்காய்வதற்கு
நேரம்பார்ப்பான்
குயவன்.

தேர்ந்த சீடனிடம்
பணிவு
தணிவு
கனிவைப் பார்ப்பார் குரு…

கடைந்த பாத்திரங்கள்
நெருப்பில் சுடப்பட்டால்தான்
அது
பாத்திரங்களாகும்.

சுடப்படும்போது
சில பாத்திரங்கள்
உடைப்படுவதுண்டு
அப்படி உடைப்படும்போது
மீண்டும் அது
களிமண்ணாவதுமில்லை
பாத்திரமாவதுமில்லை.

சிலர் இப்படித்தான்
சுடப்படும்போது
உடைப்படுகிறார்கள்.

குரு
அன்புக்காட்டுவதும்
கருணைக்காட்டுவதும்
கோபப்படுவதும்
நாம் சுடப்படுவதற்கு
ஆம்
சுட்டப்பொருள் தான்
சூடு தாங்கும்.

களிமண்ணாக இருந்தாலும்
மீண்டும் பொருட்களாகலாம்
பொருட்களாய் காட்சித் தந்து
அரைவேக்காடாய்
உலையில் உடைப்பட்டால்
யாருக்கு லாபம்.?

பக்குவப்பட்டதாய்
அரைவேக்காடுகள்
எண்ணிக்கொண்டிருந்தால்
பாத்திரங்கள் ஆக முடியுமா.?

நாம்
களிமண்ணா.?
அரைவேக்காடா.?
அல்லது
பாத்திரங்களா.?