யூத்புல் விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யூத்புல் விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 06, 2009

உறவும் பிரிவும்


பஞ்சபூதங்களின்
அஞ்சுகைகள் தான்
படைத்தோனின் உறவுகள்…

படைத்தவனை தேடுவதற்கு
உறவுகளை பிரியும் துறவுகள்…

ஆதம் ஹவ்வா
ஆதி மனித உறவுகள்…

தடைச் செய்யப்பட்ட
சொர்க்கத்து கனியை
விடைத் தேடாமல்
சுவைத்ததால்
ஏக உறவில் ஏற்பட்டது
பிரிவுகள்…

நாம் என்ற முழுமை
உறவுகளுக்கு கொடுப்பது
உயிர்கள்…
ஆனால்

நான் என்ற சுயமை
மனதில்
களைகளாய் வளர்ப்பது
பிரிவுகள்…

எதிர்பார்ப்புகளின்
ஏக்கமே
உறவுபிரிவின்
தாக்கம்…

உயிர் பிரிந்தால்
மனம் அடைவது துக்கம்…

ஆனால்
உறவு பிரிந்தால்
உள்ளம் பெறுவது கலக்கம்

வாழ்க்கை வாகனத்தில்
பிரிவு இல்லையெனில்
உறவும் இல்லை…

ஆனால்
ஏக உள்ளமையில்
உறவு என்பதும்
பிரிவு என்பதும்
இல்லவே இல்லை…!

சனி, ஆகஸ்ட் 15, 2009

கொடை



வறுமை வெறுமையாவதற்கு
வளமானவர்கள்
வள்ளலாகவேண்டும்

வாரிஇரைக்க வேண்டாம்
ஏழைகளுக்கான
வரிகளை வரம்பு மீறாமல்
வழங்கினாலே
நாம் வள்ளல்தான்

மதம் பார்த்து கொடுப்பது
கொடையல்ல
மனிதம்மறிந்து அளிப்பதே
கொடை

செத்தும் கொடுத்தார்
சீதாகாதி
இவரைப்போன்றவர்களை
இன்றும் இறவாமல் செறிவுடன்
வாழ்த்திக்கொண்டிருக்கிறது
கொடை

இருப்பவர் பொருளையும்
இல்லாதோர் இன்சொல்லையும்
இணக்கத்துடன் ஈதலே
கொடைதான்

நடைப்பாதையில்
நறுக்கென தைக்கும் முள்ளை
நளினமாய் நகர்த்துவதும்
கொடையென்றார்கள்
நபிகள் நாயகம்

அறியாதவருக்கு
அரிவரி கற்பிப்பதும்
குணம் சிதராமல்
குடும்பத்தாருடன் கூடிமகிழ்வதும்
கூழைமைத் தவறாமல்
நடப்பதும்
மனம் நோகாமல்
மனிதர்களிடம் மணப்பதும்
விவேகியாய்
விட்டுக் கொடுப்பதும்
நாம்
மனிதனாய் சமைந்ததற்கு
நம் வாழ்க்கையில்
கொடுக்க வேண்டிய
கொடை...!

வியாழன், ஆகஸ்ட் 06, 2009

நான்...?


நான் சாதித்தவன்
நான் பாதித்தவன்
நான் திறமையானவன்
நான் உண்மையானவன்

நான் செய்தேன்
நான் கொடுத்தேன்
நான் வளர்த்தேன்
நான் எடுத்தேன்

இப்படி
நான் நான் என்று
வார்த்தைக்கு வார்த்தை
வரப்புக் கட்டுகின்றோமே
அந்த நான் யார்...?

அன்னைக்கு நான் மகன்
ஆசிரியருக்கு நான் மாணவன்
மனைவிக்கு நான் கணவன்
குழந்தைக்கு நான் தகப்பன்
உறவுக்கு தக்கவாறு
நாமம் மாறலாம்
நான் மாறுவதில்லை...

நான் என்பது யார்...?

நான் - நான்தான் என்போம்
நான் என்பது உடலல்ல
நான் என்பது உயிருமல்ல...

உடலுக்கும் உயிருக்கும்
உறவாய் இருப்பது ஆன்மா
உள்ளத்தில் உறைந்திருப்பது
அந்தராத்துமா...

பொருளறையிலிருந்து
புறப்பட்டு
கருவறையில் நுழைந்தோம்

தாம் யாரென்ற சிந்தனை
நம்மில் எழுந்தாலே
நாம் பாதி ஞானி
அதை விளங்கினாலே
பதிஞானி...

நான் என்பது பிரபஞ்சம்
ஐம்பூதங்களும்
அதில் தஞ்சம்
இதில் பெறவேண்டும் விஞ்ஞம்

ஜடத்தை வைத்து
நானை மட்டுப்படுத்துவதால்
மனிதம் மரணிக்கிறது
அநீதம் பிறக்கிறது...

நானை விளங்கி
நாம் வாழ்ந்தால்
நான் உனக்கு சகோதரன்
நீ எனக்கு சகோதரன்...!

புதன், ஆகஸ்ட் 05, 2009

உறவுகள்


இல்லாமையிலிருந்து
உருவானது
இருப்பின் உறவு...

இருப்பிலிருந்து
உதயமானது
படைப்பின் உறவு...

படைப்பில்
பயணமானது
உயிரினங்களின் உறவு...

உயிரினங்களில்
உதயமானது
தாய்மையின் உறவு...

தாய்மையில் தகுதியானது
கல்வியின் உறவு...

கல்வியில்
கரைச் சேர்ப்பது
குருவின் உறவு...

குருவைக் காண்பது
தேடலின் உறவு...

தேடலில் கிடைப்பது
தெளிவின் உறவு...

தெளிவில் தெரிவது
அறிவின் உறவு...

அறிவு உணர்த்துவது
சாந்தியின் உறவு...

சாந்தி சந்தித்தது
சமாதான உறவு...

சமாதானம்
சங்கமித்தது
ஆன்மாவின் உறவு...

ஆன்மா அமைந்தது
இறையின் உறவு...

இறை நிறைந்தது
இருப்பிலும்
இல்லாமையிலும் உறவு...!

திங்கள், ஜூலை 27, 2009

ஆறாவது அறிவு




இறைவன்
பேரறிவாளன்
இயற்கை பேரறிவின்
பெருமதி
அறிவே இந்த அகிலத்தின்
வெகுமதி…

அறிவின்றி அணுவும்
அசைவதில்லை
அறிவில்லா உயிரினங்கள்
ஏதுமில்லை
அறிவில்லாமல் உயிரினங்கள்
உருவாவதுமில்லை...

ஆக்கமும் அழிவும்
அறிவின் வெளிப்பாடு
ஆதியும் அந்தமும்
பேரறிவாளனின்
திட்டப்பாடு...

உயிரினங்களில்
மனிதன் ஆறாவது அறிவில்
விளைகிறான்
விளையக்கூடிய மனிதர்களெல்லாம்
ஆறாவது அறிவில்
கனிகளாவதில்லை…

பேதங்களையும்
வாதங்களையும்
களையாமல்
அவனிடமுள்ள திரைகள்
விலகுவதில்லை...

தன்னை
நான் என்று பார்ப்பவன்
நானில்
தன்னை பார்ப்பதில்லை
தன்னையும் விண்ணையும்
காண்பதுபோல்
அனைத்தில் தன்னையும்
தன்னில் அனைத்தையும்
காணும்போது
ஏக உள்ளமையில்
எஞ்சாமைக் கொள்கிறான்
அவன்
தானே தன்னில் தானாகும் போதுதான்
பரிபூரண அறிவில் பரிணமிக்கின்றான்...

விஞ்ஞானிகள்
அறிவின் விளிம்பில்
வியக்கிறார்கள்
மெய்ஞ்ஞானியோ
அறிவின் பூரணத்தில்
பூக்கிறார்கள்...

மனிதன் மனிதனாக
வாழும்போது தான்
ஆறாவது அறிவு அவனில்
அடியீடாகிறது
அதுவரை அவன்
மொழியும் மிருகமே...!

செவ்வாய், ஜூலை 07, 2009

பூர்வீகம்

பிறந்த ஊரும்
வளர்ந்த நாடும்
வாழ்பவர்களுக்கு
பூர்வீகம் என்று
பூரிப்பு

புறப்பட்ட இடத்தை
புரிந்துணர பலருக்கு
புரியாத புதிர்

புகலை தான்னென்று
புகழ்ச்சிக் கொள்வதால்
பூரணம் நமக்கு
புதையல்
உலகறிவு உரியவருக்கு
பொருள் கொடுக்கும்
ஆன்மறிவு அனைவருக்கும்
அமைதிக் கொடுக்கும்

பூர்வீகத் தேட்டம்
நம்மிடம்
புரட்சி செய்தால்
புத்தி பூகம் விலக்கும்

பின்நோக்கி
புலன்
பின் தொடர்ந்தால்
முன்நோக்கி
பூர்வீகம்
முக்தித் தரும்

தாயின் கருவரையில்
உருவானோம்
தந்தையின் உதிரத்தில்
அருவானோம்
உணவுப்பொருட்களில்
கருவானோம்
பஞ்சபூதங்களில்
கலவையானோம்
சூத்திரத்தின்
சூக்குமம்மானோம்
சூக்குமத்தில்
சூனியமானோம்


இவைகள்
அனைத்தையும்
மறக்களானோம்
வாழ்க்கையில்
மயக்கமானோம்...!

புதன், மே 27, 2009

கவனமாகயிரு...



இளைஞனே
வாழ்க்கையை லட்சியத்தோடு
வாழ்ந்து வெற்றிபெற வேண்டிய
நீ
சிலரது வார்த்தைகளில்
உன்னை இழந்துவிடாதே
கவனமாகயிரு...

மருத்துவனாக
கணினியாளனாக
விஞ்ஞானியாக
பொறியாளனாக
இதில் ஏதோன்றாய்
நீ
சமைந்திடவே உன்னை
சமைத்தவர்களின் கனவு
அதைக் கலைப்பவர்களின்
கைகளில் சிக்கிவிடாதே
கவனமாகயிரு...

பள்ளிப்பாட நூல்களை
சுமக்கவேண்டிய உன் கரங்களில்
கலவரச்செய்திகளையும்
மதவாதப் பிரச்சனைகளையும்
சுமந்து வரும்
பத்திரிக்கைகளைத் திணிக்கப்படுவதை
அனுமதிக்காதே
கவனமாகயிரு...

கல்லூரி வாயில்களில்
சில புல்லுருவிகளின்
கோலங்கள்
உன்தோழமைக் கண்ணோட்டத்திற்கு
அவர்கள் அணியவிப்பது
மதவாதக் கண்ணாடி
கண்ணிலியாய்
நீ
உன்வகுப்புத் தோழர்களுடன்
வகுப்பு வாதம் செய்வதற்கு
கவனமாகயிரு...

சமுதாயம் என்றச் சாயத்தில்
உன்னை நிறமேற்றி
உனக்கு ஒருவர்ணத்தை
கொடுப்பதற்கு சிலர்
தருணம் பார்க்கிறார்கள்
உன்னைத் தாரைவார்த்து விடாதே
கவனமாகயிரு...

எங்கோ நிகழக்கூடிய
சில சம்பவங்கள் படமெடுக்கப்பட்டு
உன் சிந்தை அரங்கில்
திரையிடுவதற்கு
திட்டங்கள் தயாராக்கப்படுகிறது
அதை நீ
தீண்டிவிடாதே
கவனமாகயிரு...

தடுக்கப்படுகிறோம்
ஒடுக்கப்படுகிறோம்
நசுக்கப்படுகிறோம்
என்றத் தலைப்புக்களில்
மூலைச்சலவைகள் செய்து
முணைப்போடு

முறச்சிப்பார்கள்
மருள்கொண்டு விடாதே
கவனமாகயிரு...

வேதத்தைக் காண்பித்து
ஞானம் போதிக்கின்றோம்
கலங்கரை விளக்காய்
நேர்வழிக் காட்டுகிறோம்
என்று
மெய்ஞானாம் அறியவேண்டிய
உன்னை
அஞ்ஞானியாக்கிவிடுவார்கள்
கவனமாகயிரு...

மனிதநேயத்தை
நீ
விதையுண்டிருக்கிறாய்
அது துளிர்விடுவதைத் துண்டித்து
தீவிரவாதம் பேசி
சுதந்திரமாய் வாழவேண்டிய உன்னை
நான்கு சுவருக்குள்
சிறைவைத்து விடுவார்கள்
கவனமாகயிரு...

நீ என்பது இன்னொருவனின்
ஆளுமையல்ல
நீ சுயமிக்கவன்
சூத்திரம் நிறைந்தவன்
உன் பலம் தெரியாமல்
உன்னை பலவீனர்களிடம்
ஒப்படைத்து விடாதே
கவனமாகயிரு...!

சனி, அக்டோபர் 25, 2008

மத நல்லிணக்கம்.....


மத நல்லிணக்கம்

மனுஷனாக
வாழ்வதற்கே சமயங்கள்

மனிதனின்
விருப்பத்திற்கும்
அறிவுக்கும் தக்கவாறு
கொள்கைகளில் நேசங்கள்

நேசக்கரங்களில்
நேர்த்தியாய் செய்யப்பட்ட
அரிவாள் எதற்க்கு…?
அறுக்கப்படுவது பயிர்களா
மனித உயிர்களா…!

அறிவாள் தீர்கப்படவேண்டிய
பிரச்சனைகளை
அரிவாளால்
தீர்த்துக்கட்டப்படுதேன்…!

கருவறையின்
இரகசியத்தை
நம் காதுகள் கேட்பது
எப்போது…?

மழைப் பொழிந்து
அணையில் தேங்கி
நதிகளில் கலந்து
ஆறுகளில் பாய்ந்து
சங்கமிக்கின்றன சமுத்திரத்தில்

அதில்
அணை எங்கே
ஆறு எங்கே
நதி எங்கே…?

இவைகள்
நீரை சமுத்திரத்தில்
சேர்க்கும் வழிகள்

எந்த அணையிலிருந்து
வந்தோம்
எந்த நதியில் இணைந்தோம்
எந்த ஆற்றில் பிரிந்தோம்
என்பதெல்லாம்
சமுத்திரத்தில் கலந்த
நீருக்கு தெரியுமா…?

மமதையர்களின் ஆசைக்கு
மனிதர்கள் பலிஆடா…?

கோவிலும்
பள்ளிவாசலும்
மாதாகோவிலும்
புனிதமாக வழிபாடு செய்யும் போது
ஆறுமுகமும்
அப்துல்லாஹ்வும்
ஆல்பர்ட்டும்
மனிதத்தை மறந்தவர்களா…?

ஆறுமுகம் அறுவடைசெய்வது
அப்துல்லாஹ்வின் வயல்
ஆல்பர்ட் நிறுவனத்தில்
அப்துல்லாஹ் மேலாளர்
மதங்களை மறந்த
இவர்களுக்குள் வளர்வது
மதநல்லிணக்கமல்ல
மனிதநல்லினம்

தூய்மையான
இவர்களுக்கு மத்தியில்
துவைதத்தை தூவியது
யார்…?

அரசியல் என்ற
வியாபாரச் சந்தையில்
மதங்களும் மார்க்கங்களும்
விற்;பனைப் பொருள்கள்
சந்தை பரபரக்க விந்தைசெய்து
பரபக்கத்தை (பிறர்மதத்தை)
சூடுபடுத்தி குளிர்காயும்
சூத்திரக்காரர்கள்
அரசியல்வாதிகள்

பிள்ளையைக் கிள்ளிவிட்டு
தொட்டிலை ஆட்டுவதுப் போல்
கட்டும் மேம்பாலங்களிலும்
கடக்கும் சாலைகளிலும்
நடக்கும் பாதைகளிலும்
மதநல்லிணக்கம் என்றபெயரில்
பெயர்தாங்கி நிற்க்கின்றார்கள்
மறைந்த பல சமுதாய மனிதர்கள்

சாலைகளில் மதநல்லிணக்கத்தை
காண்பதை விட்டு
அரசியலில்
மதமற்ற மனிதர்களை
தேடுவோம்….

மனிதநேய உணர்வில்
அரசியல் வாழ்ந்தால்
ஆறுமுகத்தின் மகள்
அப்துல்லாஹ்வின்
மருமகள்
ஆல்பர்ட்டின் மகன்
ஆறுமுகத்திற்கு
மருமகன்…!