ஞாயிறு, அக்டோபர் 26, 2008

தீபாவளி நல் வாழ்த்துக்கள்...


என் இனிய நண்பர்களுக்கும்

வலைப்பூக்குள் வலம் வரும்

தமிழ் நெஞ்சங்களுக்கும்

தீபாவளி நல் வாழ்த்துக்கள்...

-இஸ்மத்

சனி, அக்டோபர் 25, 2008

மத நல்லிணக்கம்.....


மத நல்லிணக்கம்

மனுஷனாக
வாழ்வதற்கே சமயங்கள்

மனிதனின்
விருப்பத்திற்கும்
அறிவுக்கும் தக்கவாறு
கொள்கைகளில் நேசங்கள்

நேசக்கரங்களில்
நேர்த்தியாய் செய்யப்பட்ட
அரிவாள் எதற்க்கு…?
அறுக்கப்படுவது பயிர்களா
மனித உயிர்களா…!

அறிவாள் தீர்கப்படவேண்டிய
பிரச்சனைகளை
அரிவாளால்
தீர்த்துக்கட்டப்படுதேன்…!

கருவறையின்
இரகசியத்தை
நம் காதுகள் கேட்பது
எப்போது…?

மழைப் பொழிந்து
அணையில் தேங்கி
நதிகளில் கலந்து
ஆறுகளில் பாய்ந்து
சங்கமிக்கின்றன சமுத்திரத்தில்

அதில்
அணை எங்கே
ஆறு எங்கே
நதி எங்கே…?

இவைகள்
நீரை சமுத்திரத்தில்
சேர்க்கும் வழிகள்

எந்த அணையிலிருந்து
வந்தோம்
எந்த நதியில் இணைந்தோம்
எந்த ஆற்றில் பிரிந்தோம்
என்பதெல்லாம்
சமுத்திரத்தில் கலந்த
நீருக்கு தெரியுமா…?

மமதையர்களின் ஆசைக்கு
மனிதர்கள் பலிஆடா…?

கோவிலும்
பள்ளிவாசலும்
மாதாகோவிலும்
புனிதமாக வழிபாடு செய்யும் போது
ஆறுமுகமும்
அப்துல்லாஹ்வும்
ஆல்பர்ட்டும்
மனிதத்தை மறந்தவர்களா…?

ஆறுமுகம் அறுவடைசெய்வது
அப்துல்லாஹ்வின் வயல்
ஆல்பர்ட் நிறுவனத்தில்
அப்துல்லாஹ் மேலாளர்
மதங்களை மறந்த
இவர்களுக்குள் வளர்வது
மதநல்லிணக்கமல்ல
மனிதநல்லினம்

தூய்மையான
இவர்களுக்கு மத்தியில்
துவைதத்தை தூவியது
யார்…?

அரசியல் என்ற
வியாபாரச் சந்தையில்
மதங்களும் மார்க்கங்களும்
விற்;பனைப் பொருள்கள்
சந்தை பரபரக்க விந்தைசெய்து
பரபக்கத்தை (பிறர்மதத்தை)
சூடுபடுத்தி குளிர்காயும்
சூத்திரக்காரர்கள்
அரசியல்வாதிகள்

பிள்ளையைக் கிள்ளிவிட்டு
தொட்டிலை ஆட்டுவதுப் போல்
கட்டும் மேம்பாலங்களிலும்
கடக்கும் சாலைகளிலும்
நடக்கும் பாதைகளிலும்
மதநல்லிணக்கம் என்றபெயரில்
பெயர்தாங்கி நிற்க்கின்றார்கள்
மறைந்த பல சமுதாய மனிதர்கள்

சாலைகளில் மதநல்லிணக்கத்தை
காண்பதை விட்டு
அரசியலில்
மதமற்ற மனிதர்களை
தேடுவோம்….

மனிதநேய உணர்வில்
அரசியல் வாழ்ந்தால்
ஆறுமுகத்தின் மகள்
அப்துல்லாஹ்வின்
மருமகள்
ஆல்பர்ட்டின் மகன்
ஆறுமுகத்திற்கு
மருமகன்…!

புதன், செப்டம்பர் 24, 2008

33.மரணம்…

மரணம்…

மரணம்
இது ஜீவராசிகளுக்கு
இறைவன் விரும்பிய
கரணம்…

மரணம் இல்லாத
வாழ்க்கையில்
சுவை இல்லை
வளம் இல்லை…

மரணம் அனைவருக்கும்
சமம்
அதை மறப்பதால்
மரணச்செய்தி
கேட்டதும் மனம் ஆவது
ரனம்…

மனிதர்களுக்கு
மன்னிப்பையும்
மறத்தலையும்
அருளுவது
மரணம்…

மரணம் என்பது
அச்சமல்ல
அது ஒரு மாற்றம்
உரு மாற்றம்
எந்த பொருளுக்கும்
அழிவில்லை
எல்லாம் உருமாறுகிறது
எதில் துவங்கியதோ
அதில் நிறையும்
விரளம்…

மரணம் உடலுக்கு
அதை சுவைப்பது ஆன்மா
மண்ணோடு மண்ணாகிப்போவது
மகான்கள் அல்ல
மனிதர்கள்…

மரணிப்பவரெல்லாம்
மரணமாவதில்லை
சிலர்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்
தத்துவங்களாய்…

உடலுக்கு ஆடை உடுத்தி
ஜாடைப்பார்த்து
நிஜங்களை மறைக்க
நிறங்கள் பூசி
பல வர்ணங்களில்
அழகு பார்த்த ஆக்கை…

மரணம் என்ற நிகழ்வில்
உயிர் களையும்போது
நான் என்பதை
உடலாய் பார்த்த உள்ளம் படும்
வேதனைகள்…

ஆன்மாவின் பிரிவு
நான் என்ற எண்ணத்தில்
அவதிகள்…

நாம் மரணமாகும் முன்
நம்மில் மரணமாவோம்…

32.தர்மம்…

தர்மம்…

தர்மம் தலைக்காக்கும்
தவமாய்சொன்ன வார்த்தை…

தலைக்காக்க வேண்டி
தர்மம் செய்தேன்
கலைகாக்கவும்
தர்மம் செய்தேன்
ஏழைபசி போக்கவும்
தர்மம் செய்தேன்
எனக்குள் நிறைவு
நான் தர்மஸ்தன் என்று…

தர்மம்சொன்னது
நீ அதர்மஸ்தன்
நீசெய்த தர்மம் உன்னிடமே
தர்மம்செய்த எண்ணத்தையும்
தர்மம்செய்யாத வரையில்…!

31.வணக்கம்…

வணக்கம்…


வணக்கம்
இது இறைவனுக்கு
சொந்தமானது...

தன்னை வணங்கும்படி
இறைவன்
மனிதனுக்கு சொல்கிறான்…

வணக்கம் என்ற
வார்தையினால்
இறைவனை
வணங்க முடியாது…

வணக்கம் என்பது
செயல்பாடு
மனமும் சிந்தனையும்
ஒர் நிலை
பெறவேண்டும்-இது
ஆன்மாவிற்கும்
ஆண்டவனுக்கும்
உள்ள தொடர்பு…

மனிதனுக்கு வணக்கம்
சொல்வது-அது
இறைவனை
வணங்குவது போலன்று…

வணக்கம் சொல்வது
கீழைத் தேயத்துப் பழக்கம்
அது
தமிழர் வழக்கம்…

மனிதனுக்கு மனிதன்
வணக்கம் என்ற
வார்தையினால்
வெளிபடுத்துவது
நேசம்
மனிதனை
நேசிக்க தெரியாதவன்
இறைவனை
நேசிக்க முடியாது…

இறையின்
உயர் வெளிப்பாடு
மனிதனாக இருக்கிறான்-
அதனாலே
இறை
தனது பிரதிநிதி
மனிதன் என்கிறான்…

மனிதன்
மரணத்தை சுவைப்பவன்
மரணமாகியும்
சில மனிதர்கள்
இன்றும் வாழ்கிறார்கள்
இவர்கள்
மனிதர்களை நேசித்தவர்கள்
நேசமே
வணக்கம்…

30.எனக்கு நானே கண்ணாடி

எனக்கு நானே கண்ணாடி…

ஞானமறிய
ஞானியைத்
தேடி நின்றேன்…

ஞானம் பயில்வது
ஞானியவதற்கல்ல
மனிதனாக வாழ்வதற்கு…

குருவிற்கு முன்
குனிந்து பணிந்து விடலாம்
ஆனால்
மனிதனுக்கு முன் மனிதனாக
நடந்துக் கொள்வதில்
ஞானம்
மனிதனைப்
புனிதனாக்குகிறது…

எந்த பதவி
முக்தியைத் தருமோ
அந்த பதவி
மனித வாழ்க்கைக்கு
சித்தி தரும்…

ஞானம் கற்பது
நாட்டையும் ஆள்வதற்கு;
வாய்ப்பு கிடைத்தால்
ஆண்டு விடலாம்
ஆனால்
நோக்கம் அதுவல்ல…

குரு தந்த அறிவை
அறியாத போது
அதை
அடுத்தவர்களுக்கு
அள்ளித்தர
நாம் என்ன
வள்ளலா…?

மகத்துவை மனதில்
நிலை நிறுத்து முன்
நீதியாய் நிலத்தினில்
நடந்திடல்
வேண்டும்…

இறை ஞானத்தை
விளங்கி வந்தால்
ஒளி விளக்காகி
விடலாம்
விளங்குவதாய்
எண்ணம்
விளக்கம் எண்ணமல்ல…

துன்பமும் துயரமும்
மழையாய்
பொழியும் வேளை
அதில்
நனைகின்றவர்களுக்கு
குடையாய் நிற்பதே
சகோதரத்துவம்…

இது
ஞானம் கற்கும்
பணிமனை
மனிதனை மனிதனாக்கும்
ஆத்ம மருத்துவ மனை
இங்கு
எனக்கு நானே
கண்ணாடி…!

29.ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை…

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை…

மதங்களை மறந்து
மனிதர்களை
நேசிக்க கற்றுத்தரும்
மகத்துவமிக்க
அவை இது …

கல்லூரிக்கு சென்றாலும்
கிடைத்திடாத
ஏக இறையறிவை
கனிவாய் போதிக்கும்
சபை இது …

முட்களாய்
வீதியில் வளர்ந்த சிலர்
ரோஜா மொட்டுகளாய்
மலர்கிறார்கள் …

கற்களாய் கரைகளில்
கிடந்த சிலர்
இங்கு வைரங்களாய்
ஜொலிக்கிறார்கள்…

ஆம்
இவர்கள்
மனித நேயத்தை
சுவாசிப்பவர்கள்
இங்கு
சுடலைமணி நாடாரும்
சுல்தான் அப்துல் காதிரும்
ஒன்று தான்…

இவர்கள்
மதங்களைக் காரணங்காட்டி
தங்களுக்குள்
பேதச் சுவரை
எழுப்புவதில்லை.
அதை
இடித்துக் கொண்டிருக்கிறார்கள்…
ஆம்
இவர்கள்
மதமற்ற மதமாகிய
மெய்ஞானத்தை
சுவைப்பவர்கள்…

இவர்கள்
ஞானம் கற்பது
ஞானி ஆவதற்கல்ல
மனிதனாக வாழ்வதற்கு…

தனையறியும்
உயர் மெய்ஞானத்தை
பயிர் செய்தால்
அயோத்தியில்
மட்டுமல்ல
அகிலமனைத்திலும்
அமைதி விளையும் …

28.திருக்குர்ஆன்


திருக் குர்ஆன்…

திருக்குர்ஆன்
இது
இறைவனின்
முழுமையான உரையாடல்…

வஹி எனும்
வேத வெளிப்பாடு
‘ஹிரா’ மலையின்
உச்சத்தில்…

அண்ணல் நபிகளுக்கும்
‘ஹிரா’ மலைக்கும்
ஆழமான உறவு…

ஆயிரம் ஆண்டுகளைக்
கடந்து இன்றும்
அண்ணல் நபிகளின்
அசலை அடையாளம் காட்டும்
அகல்…

வேதம்
அகமும் புறமும்
கொண்ட தேகம்
இது ஆத்ம தாகம்
கொண்டவர்களுக்கு
தருவது ‘தீன்’ எனும்
பானம்…

வாழ்க்கை
பயணத்திற்கு -இது
விபத்தில்லாத
வாகனம்…

தேகத்தில் மட்டுப்பட்டு
தேட்டம் கொண்டவர்களுக்கு
ஏகத்திரையை
அகற்றி
அமரச் செய்யும்
ஆசனம்…


நுண்ணறிவோடு
இதில் நுழைபவர்களுக்கு
‘ நூர்’ எனும்
நுண்மையின்
நிர்வாணம்…

அறிவெனும்
ஆயுதத்தால்
ஆழத்தோண்டுபவர்களுக்கு
புதையலாய் கிடைப்பது
பூரணம்…

மனிதர்களையும்
மனிதருள்
புனிதர்களையும்
புவியிர்கு
புகட்டும் புலன்;…

மன நோயுடன்
நடை பிணமானவர்களுக்கும்
உடல் நோயால்
அவதிபடுபவர்களுக்கும்
அருள்புரியும்
மருந்தகம்…

விஞ்ஞானிகளையும்
மெய்ஞ்ஞானிகளையும்
உருவாக்கும்
தொழிற்சாலை…

அறிவு
படித்தரங்களுக் கேற்ப
அறியத்தரும்
பாடசாலை…

நீதியையும்
நிஜங்களையும்
நிறம் காட்டும்
கண்ணாடி…

சரித்திரங்ளையும்
சமுகத்தினரையும்
அவர்கள் செய்த
விசித்திரங்களையும்
விகற்பிக்கும் விளக்கு…

இறந்தவர்களுக்கும்
இறையோடு
கலந்தவர்களுக்கும்
நிறைவோடு
மறை ஒதும் போது
நிறைத்திடும்
ஆத்ம சாந்தி…

புனிதமும்இபுண்ணியமும்
பூரணமான
வேதத்திற்கு முன்;
வேடம் போடுபவர்களையும்
வேய்வு செய்பவர்களையும்
இது
வழி கெடுக்கும்
வல்லாண்மை…

பாமரர்களுக்கு
இது அளிக்கும் பரிமாணம்
துவைதம்…
பதிஞானம் கொண்டவர்களுக்கு
இது வழங்குவது
அத்வைதம்…!

27.மனிதனாய் மலர்வோம்

மனிதனாய் மலர்வோம்…


அண்ணல் பெருமானே
நீங்கள்
சொன்ன சொல்தானே
உலகில் நிஜமானது
அழகில் அழகானது
அதுவே
அறிவில் உயர்வானது…

மாநபி
வருகையினால்
மனிதன்
மனிதனானான்
மன்னரின்
வார்த்தையினால்
மனிதன்
உயர்வானான்
மறையை தந்ததனால்
மனிதன்
நிலையானான்
தன்னை அறிவதனால்
மனிதன்
நிறையாவான் …

அண்ணல் நபிகளை ஆய்தால்
அகத்தினை
அங்கே காண்போம்
ஏகத்தில்
நாமும் கலந்தால்
எண்ணத்தில்
ஏகனை நினைவோம்
தன்னிடம்
தானே மாய்ந்தால்
தண்னிலே
நிதம் மலர்வோம்
உள்ளத்தில்
ஞானம் தெளிந்தால்
இல்லத்தில்
அஞ்ஞானம் கடப்போம் …

இருப்பதெல்லாம்
ஒன்றே
மறுப்பதில் இல்லை
நன்றே
அகத்திலிருப்பது விதையே
அதை
விதைத்துப் பார்த்தால்
இறையே
இதை
அறிய நாடுவோம் குருவை
அந்த
குருவில் காணுவோம்
நிறைவை
மருவை நீக்கிடும் நம்மில்
மனிதனாக்கிடும்
மண்ணில்…!

26.புகழை புகழ்பாடுவோம்

புகழை புகழ் பாடுவோம்…


மது மாது மதி மயக்கம்
மிருகத்தையும் விட
கேடு கெட்ட நிலையில் வாழ்ந்தவர்களை
மனிதனாக வாழவைத்த
மனிதருள் மாணிக்கம்
நபிகள் நாயகம்…
அல்லவா...

இன்னல்கள்
வாழ்க்கையில் பின்னல்கள்
எதிர்நோக்கும் போதெல்லாம்
இறைவா இறைவா என்று
இறைஞ்சல்கள்
அந்த இறையை காட்டி தந்த
உத்தமர்
நபிகள் நாயகம்…
அல்லவா...

அமைதி இழப்பு
அவதிப்படும் உள்ளம்
மனம் ஆறுதல் தேட
‘அல்லாஹ்’வை நினைவு கூற
ஐங்காலத் தொழுகை
வாடிய மனதை மலரச்செய்த
வள்ளல் பெருமான்
நபிகள் நாயகம்…
அல்லவா...

எப்படியும் வாழலாம் என்பது
வாழ்க்கையன்று
இப்படித்தான் வாழ்க்கை என்று
சீறும் செம்மையும்
செப்பனிட்ட தளமாய்
அதுவே ‘ஷரிஅத’; என்ற களமாய்
அமைத்து தந்த பெருந்தகை
நபிகள் நாயகம்…
அல்லவா...

அகிலத்தின் ஆரம்பம்
அதன் முடிவு
‘வஹி’ என்னும்
வேத வெளிப்பாட்டில் முழுமை
அதை
உள்ளத்தில் உறையச்செய்யும்
திருக்குர்ஆன்
அதை பயின்றவர்கள்
‘ஹாபிஸ் ஆலீம்’களாய்
அகிலத்திற்கு அடையாளம் தந்த
அருளானவர்கள்
நபிகள் நாயகம்…
அல்லவா...

பெயருக்கு முன்னால்
‘ஹாஜி’ என்ற பட்டம்
இதை நாம் சுமப்பதற்கு
கல்லடியும் சொல்லடியும்
தன் தேகத்தில் கண்ட
கருணைக்கடல்
நபிகள் நாயகம்…
அல்லவா...

‘சூர்’ ஊதி அகிலங்கள் அழிக்கப்பட்டு
ஜீவராசிகள் மடிந்து
இறைவணக்கம் அற்றுப்போகும்
அந்நாளில்
இறைவன் அவனது மலக்குகள்
‘ஸலவாத்’ என்னும்
நபிகள் நாயகத்தின்
திரு புகழை
அணையாத அகலாய்
அட்சயபாத்திரமாய் பாடும்
மாட்சிமை மிக்க
நபிகள் நாயகம்
நமக்கு சாதாரண மனிதரா…?

அகிலப் படைப்பே
அண்ணல் பெருமானாரின்
அவதாரம்.
‘அல்லாஹ்’ அறியத்தரும் அண்ணலை
புகழ்வது
இணைவைத்தலா…?

படைத்தவன் புகழும் போது
படைக்கப்பட்ட நம்மிடம்
ஏன் இந்த பாரபட்சம்…?

பஞ்சு மெத்தையில்
பட்டு விரிப்பினில்
கட்டியணைத்த நம் மனையாளை
மானே தேன்னே மயிலே குயிலே
சந்திரனே சூரியனே
வண்ணமலரே வாடாமல்லிகையே
இப்படி
அற்ப சுகத்திற்கு
நாம் அள்ளிவிடும் வார்த்தைகள்
இறைக்கு
இணைவைத்தல் இல்லையா…?

அரசியல் தலைவர்கள்
அலுவலக மேலாளர்கள்
பதவிக்காக பொருளுக்காக
பரவசத்தோடு புகழ்வதும்
பெயருக்காக புகழுக்காக
நம்மை சார்ந்தவர்கள்
நமக்கு சம்பந்தபட்டவர்கள்
வார்த்தைக்குள் வராத வார்த்தைகளால்
புகழ்மாலை சூட்டுவதும்
இணைவைத்தல் இல்லையா…?

நமது பெற்றோரும்
நமக்கு கற்பித்தவரும்
சாதாரண மனிதரா
மெய்ஞ்ஞானியும்
விஞ்ஞானியும்
சாதாரண மனிதரா
நாட்டின் பிரதமரும்
மருத்துவரும்
சாதாரண மனிதரா…?

அறிவு படித்தரத்தில் நம்மிடம்
ஆழமான வித்தியாசங்கள்
நம்மை நாம் அறியாத நிலையில்

அகிலத்தின் அருட்கொடை
சத்திய சீலர்
சாந்த நபிகளை
நம்மோடு சரிசமம்
என்பது சரிதானா…?

அறிவின் தந்தை என்று தன்னை
ஆரத்தி எடுத்தவன் ‘அபுஜஹில்’
அவன் முட்டாள்களின் தந்தையான
சரித்திரம் நம் கையில்…

வரிந்து கட்டியவரெல்லாம்
வழுக்கி விழுந்து
மண்ணைக் கவ்விய வரலாறுகள்
நம் வாசிப்பில்…
அதனால்
அண்ணல் நபிகள் சாதரண மனிதரும் அல்ல
அவர்களை புகழ்வது
இணைவைத்தலும் அல்ல…

சாதாரணமும் இணைவைத்தலும்
சத்தியம் விளங்காதவர்களுக்கே…
அதனால்
தூசிகள்;என்றுமே சூரியனை
மறைக்க முடியாது…!