திங்கள், நவம்பர் 23, 2026

மரணம்


இறைவன் உயிர்களுக்கு எழுதிய
இறுதிக் காதல் கடிதம்! 

முடிவில்லாப் பெருவெளியில்
முகவரியற்று அலைவதிலென்ன சுவை?

மரணத்தின் எல்லையே
வாழ்வின் மதுவுக்கு வீரியம் தருகிறது! 

அரசரின் கிரீடத்தையும்
ஆண்டியின் திருவோடுட்டையும்
ஒரே தட்டில் வைக்கும்
சமத்துவ சூஃபி... மரணம்!

அவன் வருகையை மறப்பதால்தான்,
கேட்டதும் இதயம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. 

மண்ணின் மனிதர்களுக்கு
மன்னிக்கவும், காயங்களை மறக்கவும்
இறைவன் தந்த ஞான ஊற்று மரணம்! 

அஞ்சாதே நெஞ்சே...
கூண்டை உடைத்து
விண்ணில் பாயும் பறவைக்கு
மரணம் என்பது அழிவல்ல...
சிறகுகளின் மாற்றம்! 

துளியாகத் துவங்கியது
மீண்டும் பாற்கடலாக மாறுகிறது.
எங்கு உதித்ததோ
அங்குதானே நதி அடங்க வேண்டும்? 

உடல் வெறும் மண் குடுவை;
அதை உடைத்துச் சுவைப்பது
ஆன்மாவின் மது!

மண்ணோடு மண்ணாவது
மண்ணால் ஆன மனித உடல் மட்டுமே.
மகான்கள் இறப்பதில்லை,
அவர்கள் இறைவனின் மௌன கீதமாய்
ஒலித்துக் கொண்டே இருக்கிறார்கள். 

ஆடைகளை உடுத்தி,
அழகு பார்த்து, வர்ணங்கள் பூசி,
'
நான்' என்ற அகந்தை முகமூடியைப்
பரிமாறிய இந்த உடலை,
மரணம் என்ற ஒற்றை ஆடை
அபகரிக்கும் போது...
உடலே 'நான்' என்று நம்பிய
ஜீவனின் தவிப்பு...பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் வதை! 

'நாம்' என்ற பரம்பொருளோடு
'
நான்' கலக்கும் புனிதம் அது.
உடல் மடிவதற்குள்
உனக்குள் இருக்கும் 'அகந்தை' மடியட்டும்! 

ஏனெனில்...
மரணம் என்பது அச்சமல்ல,
அது காதலனின் மார்பில்
காதலி சாயும்... பேரானந்த மாற்றம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக