அமைதி எங்கு இருக்கிறது?
அமைதி எதில் இருக்கிறது?
அமைதி எப்படி இருக்கிறது?
தேடிக் கண்டடைவதற்கு
இது தொலைந்து போன பொருள் அல்ல;
தோண்டி எடுப்பதற்கு
இது புதைந்து போன புதையலும் அல்ல!
அமைதியைத் தேடி
காடுகளிலும் மலை மேடுகளிலும்
நீ அலைந்து திரிவதால்,
அது தன்னை உனக்கு அடையாளம் காட்டுமா?
திசைகளிடம் கேட்காதே,
அவை உன்னைத் திசை திருப்பிவிடும்!
வெளிச்சத்தில் தேடாதே,
அது உன்னை இருட்டில் தள்ளிவிடும்!
நீ சத்தங்களின் சிறையில் இருந்துகொண்டு
சங்கீதத்தை யாசிக்கிறாய்.
கடலின் அலைகளை எண்ணிக் கொண்டே
ஆழத்தின் மௌனத்தை மறுக்கிறாய்.
ஓடுவதை நிறுத்திவிட்டு,
உன்னை நீயே உற்றுப்பார்.
ஆரவாரங்களை அவிழ்த்துப் போட்டுவிட்டு,
உன் அகத்தின் வாசலைத் தட்டிப்பார்.
தம்மைத் தனிமைப்படுத்திப் பார்த்தால்...
சுற்றிலும் இருக்கும் சத்தங்களைச் சுருட்டி
வைத்தால்...
உன் உயிரிலும் உணர்விலும்
அது உறைந்து இருப்பதை நீ உணரலாம்!
உலகத்தை வெல்லத் துடிக்கும் உனக்கு,
உன்னை வெல்லத் தெரிவதில்லை.
அமைதி என்பது
வெளியே நடக்கும் யுத்த நிறுத்தமல்ல,
உனக்குள்ளே பூக்கும் மௌனத்தின் மலர்ச்சி!