வியாழன், நவம்பர் 26, 2026

ஒட்டகமும்... ஒளிவிளக்கும்!

 


பாலைவனத்துப் பரந்த வெளியில்

கண்மணி நாயகம்

கால்பதித்த தடங்கள்

ஒட்டகத்தின் குளம்படிகளால்

எழுதப்பட்டவை! 

மக்காவின் மணல்தாண்டி

சிரியாவுக்கும் மதினாவுக்கும்

அவர்கள் பயணித்தது

அந்த ஒட்டகப் பல்லக்குகளில்தான்! 

ஆனால் இன்று...

கப்பல் கடந்து,

மேகங்களைக் கிழிக்கும்

விமானச் சிறகுகளில் பறந்து

மணித்துளிகளில் மக்காவைத் தொடுகிறோம்! 

"நாயகம் செய்யாததைச் செய்யாதே" என

நவீனத்துவம் பேசும்

நாவன்மைக்காரர்களே!

 

விமானத்தில் பறக்கும்போது மட்டும்

உங்கள் 'விதிமுறைகள்'

எங்கே விடைபெறுகின்றன?

பயணத்தின் வாகனத்தை

காலத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளத் தெரிந்த உங்களுக்கு,

பக்தியின் வாகனத்தை மட்டும்

புரிந்துகொள்ள முடியவில்லையே... ஏன்? 

இருள் சூழ்ந்த இதயங்களுக்கு

வழிகாட்ட வந்த

கலங்கரை விளக்குகள்தாம்

அந்த அவ்லியாக்கள்! 

மகான்களின் சந்நிதியில்

மண்டியிடுவது

இறைவனுக்கு இணைவைப்பதல்ல;

அது, இறைவனை அடைந்தவர்களின்

பாதச்சுவடுகளில்

நம் தாகத்தைத் தணித்துக்கொள்ளும்

தவப்பயணம்! 

பூவைப் புகழ்வதால்

பூமிக்குப் பாரமா?

நபியைப் புகழ்ந்து

மௌலிது ஓதுவதால்

இறைவனுக்குக் குறைவா?

சூரியனை வணங்குவதற்கும்

சூரிய ஒளியால் வழிநடப்பதற்கும்

வேறுபாடு தெரியாதவர்களே! 

தர்காக்களின் வாசலில்

தவழும் தென்றல்

மரணத்தின் வாசனையல்ல;

அது, மரணத்தை வென்றவர்களின்

மவுன மொழி! 

ஒட்டகத்தை விட்டுவிட்டு

விமானம் ஏறியவர்கள் நீங்கள்;

உருவத்தை விட்டுவிட்டு

உள்ளத்தின் அன்பைப் பாருங்கள்! 

அன்புக்கு 'ஷிர்க்' இல்லை;

மரியாதைக்கு 'மறுப்பு' இல்லை! 

கண்மணி நாயகத்தின் காதலில்

கரைந்து போவதே

எங்கள் இறைவணக்கத்தின்

இன்னொரு முகவரி!

 

18/11/2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருப்பு

  வண்ணங்களின் அகராதியில் நீ எந்தப் பக்கத்தில் ஒளிந்திருக்கிறாய்? வெள்ளை உன்னைக் கண்டு வெருள்கிறது... அதன் அழுக்குகளைக் காட்டிக்கொடுக்கும் கண...