திங்கள், அக்டோபர் 12, 2009

பணமா..? குணமா...?


பணம்
மனிதனை மனிதனிலிருந்து
மாற்றி விடும்
குணம்

இதைத்தேடுவதில்
தன்னை
தொலைத்துக் கொள்ளும்
மனித இனம்

கேட்டதும்
கொடுக்கவில்லையெனில்
உறவுக்குள் ஏற்படும்
சினம்

வழிபாடுகள்
வேறுபட்டாலும்
கொடுக்கல் வாங்கலில்
உடன்படும்
மனம்

வெட்டிக் கொள்வதும்
கட்டிக்கொள்வதும்
பணத்தினால் ஏற்படும்
மனஊனம்

செத்தும் கொடுத்தவர்களும்
சொத்தையே கொடுத்தவர்களும்
பலரின் வாழ்க்கைக்கு
பாலம்

குணம் மிகைத்தவர்கள்
இனம் வகையில்லாமல்
என்றும் கொடுப்பார்கள்
தானம்

கொடுப்பதற்கு இருந்தும்
பறிப்பதற்கு பாயும்
பணப்பிச்சனின் உள்ளம்
சாணம்

பணம்தான் வாழ்க்கை
என்பவர்களிடம்
இல்லை குணம்
அவர்களிடம் இருக்கும் உயிர்
என்றும் பிணம்…!

சனி, அக்டோபர் 03, 2009

நவீன முஸ்லிம்கள்

கை பேசியில்
ஒலிக்கும்
பாங்கு

கவுண்டர் மெஷினில்
கணக்கெடுக்கும்
தஸ்பீஹ்கள்

உடல் தூய்மையுடன்
ஒதப்படவேண்டிய
திருக்குர்ஆனும்
ஹதீஸ்சும்
ஒதுவில்லாமல்
செருப்பு கால்களுடன்
கனிணியில்

நேருக்கு நேராய்
களைய வேண்டிய
கருத்து வேறுபாடுகள்
இணையத்தையும்
வலைப்பூக்களையும்
மேடைகளாக்கி
மோதிக்கொள்ளும்
தெளிவுபெறப் போகாத
பின்னூட்டங்கள்

மார்க்கப் பேணுதலுடன்
மார்க்கமாக இருக்க வேண்டிய
கன்னிப்பெண்கள்
சிலர்
பெற்றோர்களின்
கண்களில் மண்ணைத்தூவி
மாயமாகும்
எஸ்எம்எஸ் காதல்கள்

மலர்களை மாலைகளாய்
சுமந்து
மணமேடைக் கண்டது
திருமணங்கள்
சிலர்
மலர்களைவெறுத்து
மணங்களை அறுக்கும்
குறுகிய காலத்து
விவாகரத்துக்கள்

தர்ஹாக்களுக்கு
பெண்கள் செல்வது தடை
ஆனால்
தங்கள் தலைவர்களின்
அழைப்புக்கு
தலைவணங்கி
ஆண்களுடன்
அணிவகுத்துச் செல்கிறது
பெண்கள் படை

இல்லங்களை
தூய்மையாக்கி
உள்ளங்களையும்
தூய்மைப்படுத்தியது
மவ்லிது
இன்று
உள்ளங்களை
மாசுப்படுத்தி
இல்லங்களை
சூழ்ந்துக் கொண்டிருப்பது
முஸிபத்

மதஹப்புகளை
அமைத்து தந்தார்கள்
நான்கு
இமாம்கள்
ஆனால்
இல்லை என்று
மார்க்கம் போதிப்பதாய்
மதம் போதிக்கும்
இல்லையர்கள்

சாந்தியும்
சமாதானமுடையவர்களே
இஸ்லாமியர்கள்
இன்று
சந்திலும்
பொந்திலும்
வெடிக்கிறதென்று
பெற்றிருக்கும் பெயர்
தீவிரவாதிகள்


ஒரு தலைமையில்
கட்டுப்பட்டு
வாழ்ந்த ஊர்கள்
இன்று
பல ஜமாஅத்துக்களாக
தலைக்கொரு
பள்ளிகளாக
பிரிந்து நிற்கும்
தீண்டாமைகள்

இறைவன்போற்றும்
இறைத்தூதரை
தனக்கு நிகரென்று
இகழ்ந்துபேசும்
இஸ்லாமிய இலக்கணமறியாத
வெறுந்தலைகள்

ஆட்டுவதற்கும்
நீட்டுவதற்கும்
சண்டையிடுபவர்கள்
அறிவதற்கும்
புரிவதற்கும்
சட்டைபண்ணாத
இவர்கள்
நவீன முஸ்லிம்கள்

இஸ்லாமியர்களை
பார்த்துக் கொண்டு
இஸ்லாம்
வாளால் பரப்பப்பட்டதா
குண்டுகளால்
குழைக்கப்பட்டதா
குழப்பத்துடன்
மாற்று சமயத்து
சகோதரர்கள்…!