வியாழன், செப்டம்பர் 24, 2009

நீச்சல்


நீச்சல்
ஒரு பயணம்

மனிதன்
தன்னை அறிவதற்கு
நீந்தவேண்டும்

நீத்துகின்றான்
கப்பலில்
விமானத்தில்
பொருள்தேடி.

கட்டுப்பாடில்லாமல்
நீந்திக் கொண்டிருந்தால்
கரையேறுவது எப்போது.?
சிலர்
காலம் கடந்து
கரையேறுகிறார்கள்
கறைகளோடு

வாழ்க்கை என்பது
பலருக்கு பொருளாக
இருக்கிறது
அதை
வெளியில் தேடுகிறார்கள்

பொருள்கள்
எண்ணத்தை
கறைபடுத்துகிறது
கறைகளை கழுகவேண்டும்
நீரில் அல்ல.
மனக்கறைகளை நீக்குவது
ஞானம்.
எழுத்து
கறைகளைக் கொண்டுதான்
மனக்கறைகளை போக்கவேண்டும்

தூய்மையை
தரிசிப்பதற்கு
தூய்மைவேண்டுமே.!

அழுக்குகள்
தூய்மையை
தரிசிக்க முடியுமா.?

கட்டுபாட்டுக்குள்
பறந்தால்தான் பட்டம்
அறுக்கப்படுவதெல்லாம்
குர்பானி அல்ல.

பறவைகள்
நீந்துவது
இறக்கைகளின்
கட்டுபாட்டில்

பூமி நீந்துவது
சூரியனின்
கட்டுப்பாட்டில்

விண்மீண்கள்
நீந்துவது
பிரபஞ்சக் கட்டுப்பாட்டில்

சுயத்தின் கட்டுப்பாட்டில்
நீந்தவேண்டிய மனிதன்
சுயநல கட்டுபாட்டில்
நீச்சலடிக்கிறான்…!

திங்கள், செப்டம்பர் 21, 2009

குனிந்து நிமிர்ந்து…



வணங்கவேண்டும்
யாரை வணங்குவது.?
வணக்கத்தை.!

வணக்கம் என்ன இறைவனா.?

இறைவனைத் தான்
வணங்குகிறோமா.?

கடமைக்கா
வணங்குகிறோம்
உடைமைக்காக
வணங்குகின்றோமா.?

நேரம் தவறாமல்
வணங்குகிறோம்
நேர்மையை
வணங்குகிறோமா.?

பசிக்காகவேண்டி
பயணிக்கிறோம்
பசித்தவர்களுக்கு
உணவாகின்றோமா.?

நான் என்று
நிமிர்கின்றோமே தவிர
நான் என்று விளங்குகிறோமா.?

படைப்பு
படைத்தவனை வணங்கலாம்
படைத்தவன்
படைப்புக்குள்தானே.!
வணக்கமும்
வணங்கப்படுவதும்
நம்மில்.!

குனிவதெல்லாம்
வணக்கமல்ல
குப்பைகளாய்
வீசப்படும்.

ஏற்றமரம்
குனிந்து நிமிர்கிறது
பயிர்களுக்கு அது
பாசனம்.

பயிர்கள்
நிமிர்ந்து குனிகிறது
நமக்கு தானியங்கள்

நாம்
குனிந்து நிமிர்வது
வணக்கவாழி என்ற
அடையாளத்திற்குதானே

பலர்
குனிவதெல்லாம்
அவர்களின்
வயிற்று ஆகாரத்திற்காக
மட்டுமே!

சனி, செப்டம்பர் 19, 2009

குரு சீடன்


குயவன் கையில்
களிமண்ணைப் போல்
குருவிடம் சீடன்…!

களிமண்ணை
குழைத்து
வளைத்து
நெளித்து
உருவகப்படுத்துகிறான்
குயவன்…

பொறுமை
போதனை
சோதனையைக் கொண்டு
பக்குவப்படுத்துகிறார்
குரு…

குருவின் கையில்
களிமண்ணாக
சீடன் இருந்தால்தான்
பொருளாக முடியும்.
பொருளாகவே குருவிடம் சென்றால்
அந்தபொருளுக்கு
பொருள் இருக்காது
அருள் இருக்காது
நயமிருக்காது
நளினமுமிருக்காது.

கடைந்த பாத்திரங்களை
ஈரம்காய்வதற்கு
நேரம்பார்ப்பான்
குயவன்.

தேர்ந்த சீடனிடம்
பணிவு
தணிவு
கனிவைப் பார்ப்பார் குரு…

கடைந்த பாத்திரங்கள்
நெருப்பில் சுடப்பட்டால்தான்
அது
பாத்திரங்களாகும்.

சுடப்படும்போது
சில பாத்திரங்கள்
உடைப்படுவதுண்டு
அப்படி உடைப்படும்போது
மீண்டும் அது
களிமண்ணாவதுமில்லை
பாத்திரமாவதுமில்லை.

சிலர் இப்படித்தான்
சுடப்படும்போது
உடைப்படுகிறார்கள்.

குரு
அன்புக்காட்டுவதும்
கருணைக்காட்டுவதும்
கோபப்படுவதும்
நாம் சுடப்படுவதற்கு
ஆம்
சுட்டப்பொருள் தான்
சூடு தாங்கும்.

களிமண்ணாக இருந்தாலும்
மீண்டும் பொருட்களாகலாம்
பொருட்களாய் காட்சித் தந்து
அரைவேக்காடாய்
உலையில் உடைப்பட்டால்
யாருக்கு லாபம்.?

பக்குவப்பட்டதாய்
அரைவேக்காடுகள்
எண்ணிக்கொண்டிருந்தால்
பாத்திரங்கள் ஆக முடியுமா.?

நாம்
களிமண்ணா.?
அரைவேக்காடா.?
அல்லது
பாத்திரங்களா.?

வியாழன், செப்டம்பர் 17, 2009

அனைத்திலும் அனைத்துமாய்....

இறைவா…!
நீ என் நம்பிக்கையில்
நிழலாடுகிறாய்
நீ என்பது நம்பிக்கை மட்டும்தானா?

எதையும்
கண்டு உண்டு தொட்டு முகர்ந்து
புணர்ந்து…இப்படி
வாழ்ந்துக் கொண்டிருக்கும்
எனக்கு
அருபமான உன்னை
என் மனக்கண் முன்
உருவம் கொடுத்து
பார்க்க முடியுமா?
அப்படிப் பார்த்தால்
உருவத்திற்குள் உன்னை
மட்டுப்படுத்தி
கட்டுப்படுத்தி
மிகப் பெரியவான உன்னை
சிறுமைப்படுத்தி விடுவதாகுமே…!

கல்லைவைத்து
கடவுளை காண்கிறார்கள்
சிலர் சொல்லை வைத்து உன்னை
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த இருவருக்கும்
என்ன வித்தியாசம்?

கையேந்தி உன்னிடம்
கேட்கும் போதும்
கையை மேலே காட்டி
பேசும் போதும்
தனிமையான உன்னை
நான்
தனிமைப் படுத்தி விடுவதல்லவா…!

வணக்கத்தின்போது
என்னை பார்த்துக் கொண்டிருப்பது போல்
அல்லது
நான் உன்னை பார்த்துக் கொண்டிருப்பது போல்
வணங்கச் சொல்கிறாய்
அப்படியானால்
நீ என்பது எண்ணமா?

உன் திருநாமத்தை
உச்சரித்தால்
நல்லடியார்களின் உள்ளம்
நடுங்கும் என்கிறாய்
அப்படியானால்
நீ என்ன அச்சமா?

எந்த அடியானாவது
தன் தூக்கத்தை விட்டு
பின்னிரவில் எனக்காக எழுந்து
வணங்குகின்றானா?
அடிவானத்திலிருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்று வேறு படுத்தி கூறுகின்றாய்
நீயென்ன துவைதமா?

என் பிடரியின் நரம்பிற்கும்
சமீபத்தில்
நம்முடைய நெருக்கம்
அதை நான் விளங்காதபோது
உன் வேதத்தை படித்துவிட்டு
போதனை செய்வதால்
நான் என்ன விளக்கவாதியா?

விளக்கமே இல்லாமல்
விழுந்து விழுந்து
உன்னை வணங்கிக் கொண்டிருப்பதால்
நான் என்ன வணக்கவாதியா?

வேதத்தை தந்தது
வேடம் களைவதற்குத் தானே
வேதம் படித்திருக்கிறேன் என்று
வாதம் செய்வதற்கா.?

வேடத்தை களைக்காமல்
வேதத்தையே படித்துக்கொண்டிருப்பதால்
நான் என்ன சீர்திருத்தவாதியா…?

ஒற்றுமையென்னும் கயிற்றை
பலமாக பற்றி பிடிக்கச் சொன்னாய்
பிரிந்திருப்பவைகளை
ஒன்றுப்படுத்துவதுதானே ஒற்றுமை
அதுதானே ஏகத்துவம்
இதில் இருக்கிறதே பல தத்துவம்
அந்த கயிற்றை பலமாகப்பிடிப்பதற்கு
எங்களின் கைகளில் பலமில்லையே…!

நெருப்பையும் களிமண்ணையும்
வேற்றுமைப் படுத்திய
ஷைத்தானின் எண்ணம்
நீவேறு
உன் படைப்பினங்கள் வேறு
என்று
ஒற்றுமையை துவைதப்படுத்திக் கொண்டிருக்கிறது.
உன்னை வேறுபடுத்துவதால்
இல்லை அவர்களிடம் ஒற்றுமை...

ஷைத்தானின் கைகளில்
வேதமிருப்பதால்
அப்பாவி கண்களுக்கு வேதம்தானே தெரிகிறது
வழிகெடுக்கப்படுவதை
அவர்களின் விழிக்கூட நம்ப மறுக்கிறதே…!

ஒரே சமுதாயமாக
வாழவேண்டியவர்கள்
ஒரு ஊருக்குள் பலபிரிவினர்களாக
பிரிக்கப்படுகிறார்கள்
ஒற்றுமையிலிருந்து சிதைக்கப்படுகிறார்கள்

இறைவா
நீ எங்கோ இருந்துக் கொண்டு
இயக்குவதாய் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களின் உள்ளத்தில் தெளிவில்லை
அதனால்
எண்ணத்தில் தூரமிருக்கிறது.

நீ அனைத்துமாக
அனைத்திலும் நீயாக இருந்து
இயங்குகின்றாய்
அனைத்திலும் நீயாக இருக்கும்போது
அந்த அனைத்தில் நானுமிருக்கிறேன்
இதை
எப்போது விளங்கப்போகிறார்கள்.?
இவர்களை நேர்வழிப் படுத்துவாயாக...!

ஞாயிறு, செப்டம்பர் 06, 2009

உறவும் பிரிவும்


பஞ்சபூதங்களின்
அஞ்சுகைகள் தான்
படைத்தோனின் உறவுகள்…

படைத்தவனை தேடுவதற்கு
உறவுகளை பிரியும் துறவுகள்…

ஆதம் ஹவ்வா
ஆதி மனித உறவுகள்…

தடைச் செய்யப்பட்ட
சொர்க்கத்து கனியை
விடைத் தேடாமல்
சுவைத்ததால்
ஏக உறவில் ஏற்பட்டது
பிரிவுகள்…

நாம் என்ற முழுமை
உறவுகளுக்கு கொடுப்பது
உயிர்கள்…
ஆனால்

நான் என்ற சுயமை
மனதில்
களைகளாய் வளர்ப்பது
பிரிவுகள்…

எதிர்பார்ப்புகளின்
ஏக்கமே
உறவுபிரிவின்
தாக்கம்…

உயிர் பிரிந்தால்
மனம் அடைவது துக்கம்…

ஆனால்
உறவு பிரிந்தால்
உள்ளம் பெறுவது கலக்கம்

வாழ்க்கை வாகனத்தில்
பிரிவு இல்லையெனில்
உறவும் இல்லை…

ஆனால்
ஏக உள்ளமையில்
உறவு என்பதும்
பிரிவு என்பதும்
இல்லவே இல்லை…!