வெள்ளி, டிசம்பர் 25, 2009

இசையும் பாடலும்


இசை
ஜீவன்களை
இணங்க வைத்து
அசைக்க வைக்கும் ஆதி
குன் என்ற ஓசையில்தான்
இந்த
உலகத்தின் ஜோதி.

ஓசையில்தான்
மனிதனுக்கு பிறந்தது ஆசை
ஆசையினால்
மனிதன் மறந்துபோனான்
தன் சுய ஓசை.

"ஹு" என்ற ஓசையின் முடிவே
"ஓம்" என்ற நாதம்
சுரங்களை சுரக்க வைக்கும்
இவைகளில்
இல்லை பேதம்.

பிறப்பு இசைத்தால்
தாயிக்கு ஆதாரம்
பூக்கள் இசைத்தால்
தேனுன்னிகளுக்கு ஆகாரம்
பூகம்பம் இசைத்தால்
மனிதனுக்கு சேதாரம்.

காற்றின் இசையை யாரும்
கற்றுக் கொள்வதில்லை
கடலின்இசையை நாம்
கவனிப்பதில்லை
இயற்கையின் இசையை
நாம் இயற்றுவதில்லை
பசியின் இசையை நாம்
உணர்வதில்லை

இசை
மனிதனை வாழச் செய்கிறது
மனிதனுக்குள் வாழவும் செய்கிறது.!

செவ்வாய், நவம்பர் 24, 2009

தியாகத் திருநாள்


நபி இபுராஹிமுக்கு
நழுவிப்போன நனவில்
அவரைத் தழுவிக்கொண்டது
நான்-என்ற எண்ணம்...

தவமிருந்து தரித்த தனையனை
தத்துவமறந்து தழுவியதால்
அல்லாஹ் ஆணையிட்டான்
அறுத்துவிடு...

அவரின் ஏகஉள்ளமையில்
ஏற்பட்ட தடுமாற்றம்
பெற்றபாசம்
படைத்தவனை
எண்ணத்திலிருந்து
பாலையாக்கியது...

நான்-என்ற சுயநலத்தை
அறுத்து
நாம் என்ற சுயத்தை
அருந்த வேண்டிய ஆணை...

இருப்பதும் இல்லாமையும்
இறையாகும் போது
அறுப்பதும் அறுக்கப்படுவதும்
பேதமாவதில்லை...

அறுப்பது நானாக இருந்தாலும்
அறுக்கப்படுவதில்
நான் இருக்கவேண்டும்
அது தான் குர்பான்...

இது தீர்க்கதரிசிக்கு
இறைவன் தந்த
தீர்ப்புமட்டுமல்ல
தீனோர்க்கு இட்டகட்டளை...!

ஞாயிறு, நவம்பர் 15, 2009

நாம் விடையா வினாவா…?தன்னை அறிய நாடியது
விடை
பிரபஞ்சமானது
வினா…

வினாவும்
விடையும்
வேறு வேறு
கோணங்களல்ல
கடலும் அலையும்போல
தங்கமும் நகையும்போல…

விடைகளைத்தேடி
பயணிக்கிறோம்
நாம்
வினாக்களல்ல…

விடைகளால்
தடுக்கப்படுபவைகள்
வினாக்களால்
உடைக்கப்படுகிறது…

தேர்வு
விடைகளுக்கல்ல
வினாக்களுக்கு…

விழுந்தது
விடையானதால்தான்
நியூட்டன்
வினாவானான்…

இருளும் ஒளியும்
விடையானதால்தான்
எடிசன்
வினாவானான்…

அறியப்படுவதெல்லாம்
விடைகளல்ல
ஆனால்
அனுபவிக்கப்படுதெல்லாம்
வினாக்கள்…

வாழ்க்கை
விடையாகத்தான் இருக்கிறது
பலருக்கு
வினாக்கள் தெரியவில்லை

விடைத்தேடும்
விடைகள்
வினாக்கள் ஆவதில்லை
வீணாகிக் கொண்டிருக்கிறது…

விடை
மர்மமல்ல
வினாத்தான்
கர்மமாக இருக்கிறது…

நாம் யார் என்று
வினாவைக் கேளுங்கள்
நாம் என்றே
விடைக் கொடுக்கும்…

அதனால் சொல்கிறேன்
நாம் வினாக்கள் அல்ல
விடைகள்…!

திங்கள், அக்டோபர் 12, 2009

பணமா..? குணமா...?


பணம்
மனிதனை மனிதனிலிருந்து
மாற்றி விடும்
குணம்

இதைத்தேடுவதில்
தன்னை
தொலைத்துக் கொள்ளும்
மனித இனம்

கேட்டதும்
கொடுக்கவில்லையெனில்
உறவுக்குள் ஏற்படும்
சினம்

வழிபாடுகள்
வேறுபட்டாலும்
கொடுக்கல் வாங்கலில்
உடன்படும்
மனம்

வெட்டிக் கொள்வதும்
கட்டிக்கொள்வதும்
பணத்தினால் ஏற்படும்
மனஊனம்

செத்தும் கொடுத்தவர்களும்
சொத்தையே கொடுத்தவர்களும்
பலரின் வாழ்க்கைக்கு
பாலம்

குணம் மிகைத்தவர்கள்
இனம் வகையில்லாமல்
என்றும் கொடுப்பார்கள்
தானம்

கொடுப்பதற்கு இருந்தும்
பறிப்பதற்கு பாயும்
பணப்பிச்சனின் உள்ளம்
சாணம்

பணம்தான் வாழ்க்கை
என்பவர்களிடம்
இல்லை குணம்
அவர்களிடம் இருக்கும் உயிர்
என்றும் பிணம்…!

சனி, அக்டோபர் 03, 2009

நவீன முஸ்லிம்கள்

கை பேசியில்
ஒலிக்கும்
பாங்கு

கவுண்டர் மெஷினில்
கணக்கெடுக்கும்
தஸ்பீஹ்கள்

உடல் தூய்மையுடன்
ஒதப்படவேண்டிய
திருக்குர்ஆனும்
ஹதீஸ்சும்
ஒதுவில்லாமல்
செருப்பு கால்களுடன்
கனிணியில்

நேருக்கு நேராய்
களைய வேண்டிய
கருத்து வேறுபாடுகள்
இணையத்தையும்
வலைப்பூக்களையும்
மேடைகளாக்கி
மோதிக்கொள்ளும்
தெளிவுபெறப் போகாத
பின்னூட்டங்கள்

மார்க்கப் பேணுதலுடன்
மார்க்கமாக இருக்க வேண்டிய
கன்னிப்பெண்கள்
சிலர்
பெற்றோர்களின்
கண்களில் மண்ணைத்தூவி
மாயமாகும்
எஸ்எம்எஸ் காதல்கள்

மலர்களை மாலைகளாய்
சுமந்து
மணமேடைக் கண்டது
திருமணங்கள்
சிலர்
மலர்களைவெறுத்து
மணங்களை அறுக்கும்
குறுகிய காலத்து
விவாகரத்துக்கள்

தர்ஹாக்களுக்கு
பெண்கள் செல்வது தடை
ஆனால்
தங்கள் தலைவர்களின்
அழைப்புக்கு
தலைவணங்கி
ஆண்களுடன்
அணிவகுத்துச் செல்கிறது
பெண்கள் படை

இல்லங்களை
தூய்மையாக்கி
உள்ளங்களையும்
தூய்மைப்படுத்தியது
மவ்லிது
இன்று
உள்ளங்களை
மாசுப்படுத்தி
இல்லங்களை
சூழ்ந்துக் கொண்டிருப்பது
முஸிபத்

மதஹப்புகளை
அமைத்து தந்தார்கள்
நான்கு
இமாம்கள்
ஆனால்
இல்லை என்று
மார்க்கம் போதிப்பதாய்
மதம் போதிக்கும்
இல்லையர்கள்

சாந்தியும்
சமாதானமுடையவர்களே
இஸ்லாமியர்கள்
இன்று
சந்திலும்
பொந்திலும்
வெடிக்கிறதென்று
பெற்றிருக்கும் பெயர்
தீவிரவாதிகள்


ஒரு தலைமையில்
கட்டுப்பட்டு
வாழ்ந்த ஊர்கள்
இன்று
பல ஜமாஅத்துக்களாக
தலைக்கொரு
பள்ளிகளாக
பிரிந்து நிற்கும்
தீண்டாமைகள்

இறைவன்போற்றும்
இறைத்தூதரை
தனக்கு நிகரென்று
இகழ்ந்துபேசும்
இஸ்லாமிய இலக்கணமறியாத
வெறுந்தலைகள்

ஆட்டுவதற்கும்
நீட்டுவதற்கும்
சண்டையிடுபவர்கள்
அறிவதற்கும்
புரிவதற்கும்
சட்டைபண்ணாத
இவர்கள்
நவீன முஸ்லிம்கள்

இஸ்லாமியர்களை
பார்த்துக் கொண்டு
இஸ்லாம்
வாளால் பரப்பப்பட்டதா
குண்டுகளால்
குழைக்கப்பட்டதா
குழப்பத்துடன்
மாற்று சமயத்து
சகோதரர்கள்…!

வியாழன், செப்டம்பர் 24, 2009

நீச்சல்


நீச்சல்
ஒரு பயணம்

மனிதன்
தன்னை அறிவதற்கு
நீந்தவேண்டும்

நீத்துகின்றான்
கப்பலில்
விமானத்தில்
பொருள்தேடி.

கட்டுப்பாடில்லாமல்
நீந்திக் கொண்டிருந்தால்
கரையேறுவது எப்போது.?
சிலர்
காலம் கடந்து
கரையேறுகிறார்கள்
கறைகளோடு

வாழ்க்கை என்பது
பலருக்கு பொருளாக
இருக்கிறது
அதை
வெளியில் தேடுகிறார்கள்

பொருள்கள்
எண்ணத்தை
கறைபடுத்துகிறது
கறைகளை கழுகவேண்டும்
நீரில் அல்ல.
மனக்கறைகளை நீக்குவது
ஞானம்.
எழுத்து
கறைகளைக் கொண்டுதான்
மனக்கறைகளை போக்கவேண்டும்

தூய்மையை
தரிசிப்பதற்கு
தூய்மைவேண்டுமே.!

அழுக்குகள்
தூய்மையை
தரிசிக்க முடியுமா.?

கட்டுபாட்டுக்குள்
பறந்தால்தான் பட்டம்
அறுக்கப்படுவதெல்லாம்
குர்பானி அல்ல.

பறவைகள்
நீந்துவது
இறக்கைகளின்
கட்டுபாட்டில்

பூமி நீந்துவது
சூரியனின்
கட்டுப்பாட்டில்

விண்மீண்கள்
நீந்துவது
பிரபஞ்சக் கட்டுப்பாட்டில்

சுயத்தின் கட்டுப்பாட்டில்
நீந்தவேண்டிய மனிதன்
சுயநல கட்டுபாட்டில்
நீச்சலடிக்கிறான்…!

திங்கள், செப்டம்பர் 21, 2009

குனிந்து நிமிர்ந்து…வணங்கவேண்டும்
யாரை வணங்குவது.?
வணக்கத்தை.!

வணக்கம் என்ன இறைவனா.?

இறைவனைத் தான்
வணங்குகிறோமா.?

கடமைக்கா
வணங்குகிறோம்
உடைமைக்காக
வணங்குகின்றோமா.?

நேரம் தவறாமல்
வணங்குகிறோம்
நேர்மையை
வணங்குகிறோமா.?

பசிக்காகவேண்டி
பயணிக்கிறோம்
பசித்தவர்களுக்கு
உணவாகின்றோமா.?

நான் என்று
நிமிர்கின்றோமே தவிர
நான் என்று விளங்குகிறோமா.?

படைப்பு
படைத்தவனை வணங்கலாம்
படைத்தவன்
படைப்புக்குள்தானே.!
வணக்கமும்
வணங்கப்படுவதும்
நம்மில்.!

குனிவதெல்லாம்
வணக்கமல்ல
குப்பைகளாய்
வீசப்படும்.

ஏற்றமரம்
குனிந்து நிமிர்கிறது
பயிர்களுக்கு அது
பாசனம்.

பயிர்கள்
நிமிர்ந்து குனிகிறது
நமக்கு தானியங்கள்

நாம்
குனிந்து நிமிர்வது
வணக்கவாழி என்ற
அடையாளத்திற்குதானே

பலர்
குனிவதெல்லாம்
அவர்களின்
வயிற்று ஆகாரத்திற்காக
மட்டுமே!

சனி, செப்டம்பர் 19, 2009

குரு சீடன்


குயவன் கையில்
களிமண்ணைப் போல்
குருவிடம் சீடன்…!

களிமண்ணை
குழைத்து
வளைத்து
நெளித்து
உருவகப்படுத்துகிறான்
குயவன்…

பொறுமை
போதனை
சோதனையைக் கொண்டு
பக்குவப்படுத்துகிறார்
குரு…

குருவின் கையில்
களிமண்ணாக
சீடன் இருந்தால்தான்
பொருளாக முடியும்.
பொருளாகவே குருவிடம் சென்றால்
அந்தபொருளுக்கு
பொருள் இருக்காது
அருள் இருக்காது
நயமிருக்காது
நளினமுமிருக்காது.

கடைந்த பாத்திரங்களை
ஈரம்காய்வதற்கு
நேரம்பார்ப்பான்
குயவன்.

தேர்ந்த சீடனிடம்
பணிவு
தணிவு
கனிவைப் பார்ப்பார் குரு…

கடைந்த பாத்திரங்கள்
நெருப்பில் சுடப்பட்டால்தான்
அது
பாத்திரங்களாகும்.

சுடப்படும்போது
சில பாத்திரங்கள்
உடைப்படுவதுண்டு
அப்படி உடைப்படும்போது
மீண்டும் அது
களிமண்ணாவதுமில்லை
பாத்திரமாவதுமில்லை.

சிலர் இப்படித்தான்
சுடப்படும்போது
உடைப்படுகிறார்கள்.

குரு
அன்புக்காட்டுவதும்
கருணைக்காட்டுவதும்
கோபப்படுவதும்
நாம் சுடப்படுவதற்கு
ஆம்
சுட்டப்பொருள் தான்
சூடு தாங்கும்.

களிமண்ணாக இருந்தாலும்
மீண்டும் பொருட்களாகலாம்
பொருட்களாய் காட்சித் தந்து
அரைவேக்காடாய்
உலையில் உடைப்பட்டால்
யாருக்கு லாபம்.?

பக்குவப்பட்டதாய்
அரைவேக்காடுகள்
எண்ணிக்கொண்டிருந்தால்
பாத்திரங்கள் ஆக முடியுமா.?

நாம்
களிமண்ணா.?
அரைவேக்காடா.?
அல்லது
பாத்திரங்களா.?

வியாழன், செப்டம்பர் 17, 2009

அனைத்திலும் அனைத்துமாய்....

இறைவா…!
நீ என் நம்பிக்கையில்
நிழலாடுகிறாய்
நீ என்பது நம்பிக்கை மட்டும்தானா?

எதையும்
கண்டு உண்டு தொட்டு முகர்ந்து
புணர்ந்து…இப்படி
வாழ்ந்துக் கொண்டிருக்கும்
எனக்கு
அருபமான உன்னை
என் மனக்கண் முன்
உருவம் கொடுத்து
பார்க்க முடியுமா?
அப்படிப் பார்த்தால்
உருவத்திற்குள் உன்னை
மட்டுப்படுத்தி
கட்டுப்படுத்தி
மிகப் பெரியவான உன்னை
சிறுமைப்படுத்தி விடுவதாகுமே…!

கல்லைவைத்து
கடவுளை காண்கிறார்கள்
சிலர் சொல்லை வைத்து உன்னை
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த இருவருக்கும்
என்ன வித்தியாசம்?

கையேந்தி உன்னிடம்
கேட்கும் போதும்
கையை மேலே காட்டி
பேசும் போதும்
தனிமையான உன்னை
நான்
தனிமைப் படுத்தி விடுவதல்லவா…!

வணக்கத்தின்போது
என்னை பார்த்துக் கொண்டிருப்பது போல்
அல்லது
நான் உன்னை பார்த்துக் கொண்டிருப்பது போல்
வணங்கச் சொல்கிறாய்
அப்படியானால்
நீ என்பது எண்ணமா?

உன் திருநாமத்தை
உச்சரித்தால்
நல்லடியார்களின் உள்ளம்
நடுங்கும் என்கிறாய்
அப்படியானால்
நீ என்ன அச்சமா?

எந்த அடியானாவது
தன் தூக்கத்தை விட்டு
பின்னிரவில் எனக்காக எழுந்து
வணங்குகின்றானா?
அடிவானத்திலிருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்று வேறு படுத்தி கூறுகின்றாய்
நீயென்ன துவைதமா?

என் பிடரியின் நரம்பிற்கும்
சமீபத்தில்
நம்முடைய நெருக்கம்
அதை நான் விளங்காதபோது
உன் வேதத்தை படித்துவிட்டு
போதனை செய்வதால்
நான் என்ன விளக்கவாதியா?

விளக்கமே இல்லாமல்
விழுந்து விழுந்து
உன்னை வணங்கிக் கொண்டிருப்பதால்
நான் என்ன வணக்கவாதியா?

வேதத்தை தந்தது
வேடம் களைவதற்குத் தானே
வேதம் படித்திருக்கிறேன் என்று
வாதம் செய்வதற்கா.?

வேடத்தை களைக்காமல்
வேதத்தையே படித்துக்கொண்டிருப்பதால்
நான் என்ன சீர்திருத்தவாதியா…?

ஒற்றுமையென்னும் கயிற்றை
பலமாக பற்றி பிடிக்கச் சொன்னாய்
பிரிந்திருப்பவைகளை
ஒன்றுப்படுத்துவதுதானே ஒற்றுமை
அதுதானே ஏகத்துவம்
இதில் இருக்கிறதே பல தத்துவம்
அந்த கயிற்றை பலமாகப்பிடிப்பதற்கு
எங்களின் கைகளில் பலமில்லையே…!

நெருப்பையும் களிமண்ணையும்
வேற்றுமைப் படுத்திய
ஷைத்தானின் எண்ணம்
நீவேறு
உன் படைப்பினங்கள் வேறு
என்று
ஒற்றுமையை துவைதப்படுத்திக் கொண்டிருக்கிறது.
உன்னை வேறுபடுத்துவதால்
இல்லை அவர்களிடம் ஒற்றுமை...

ஷைத்தானின் கைகளில்
வேதமிருப்பதால்
அப்பாவி கண்களுக்கு வேதம்தானே தெரிகிறது
வழிகெடுக்கப்படுவதை
அவர்களின் விழிக்கூட நம்ப மறுக்கிறதே…!

ஒரே சமுதாயமாக
வாழவேண்டியவர்கள்
ஒரு ஊருக்குள் பலபிரிவினர்களாக
பிரிக்கப்படுகிறார்கள்
ஒற்றுமையிலிருந்து சிதைக்கப்படுகிறார்கள்

இறைவா
நீ எங்கோ இருந்துக் கொண்டு
இயக்குவதாய் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களின் உள்ளத்தில் தெளிவில்லை
அதனால்
எண்ணத்தில் தூரமிருக்கிறது.

நீ அனைத்துமாக
அனைத்திலும் நீயாக இருந்து
இயங்குகின்றாய்
அனைத்திலும் நீயாக இருக்கும்போது
அந்த அனைத்தில் நானுமிருக்கிறேன்
இதை
எப்போது விளங்கப்போகிறார்கள்.?
இவர்களை நேர்வழிப் படுத்துவாயாக...!

ஞாயிறு, செப்டம்பர் 06, 2009

உறவும் பிரிவும்


பஞ்சபூதங்களின்
அஞ்சுகைகள் தான்
படைத்தோனின் உறவுகள்…

படைத்தவனை தேடுவதற்கு
உறவுகளை பிரியும் துறவுகள்…

ஆதம் ஹவ்வா
ஆதி மனித உறவுகள்…

தடைச் செய்யப்பட்ட
சொர்க்கத்து கனியை
விடைத் தேடாமல்
சுவைத்ததால்
ஏக உறவில் ஏற்பட்டது
பிரிவுகள்…

நாம் என்ற முழுமை
உறவுகளுக்கு கொடுப்பது
உயிர்கள்…
ஆனால்

நான் என்ற சுயமை
மனதில்
களைகளாய் வளர்ப்பது
பிரிவுகள்…

எதிர்பார்ப்புகளின்
ஏக்கமே
உறவுபிரிவின்
தாக்கம்…

உயிர் பிரிந்தால்
மனம் அடைவது துக்கம்…

ஆனால்
உறவு பிரிந்தால்
உள்ளம் பெறுவது கலக்கம்

வாழ்க்கை வாகனத்தில்
பிரிவு இல்லையெனில்
உறவும் இல்லை…

ஆனால்
ஏக உள்ளமையில்
உறவு என்பதும்
பிரிவு என்பதும்
இல்லவே இல்லை…!

திங்கள், ஆகஸ்ட் 31, 2009

விடியல்விடியலுக்காக காத்திருக்கும்
விசுத்தமில்லா மனிதர்கள்
விதியை நொந்து
மதியைமறந்து
மயக்கமுறும்
மத்தனர்கள்

இவர்களுக்கு
தெரியுமா...?

மனிதன் மனிதனாக
வாழாதவரையில்
நாட்கள்
விடிவதில்லை
தன்னை அறிந்த
மனிதனுக்கு
வாழ்க்கை
விடியாமல் போனதில்லை...!

புதன், ஆகஸ்ட் 26, 2009

சாரல்


பெய்துக் கொண்டிருக்கிறது
சிலர் நனைகின்றோம்
பலர் நகர்கின்றோம்
எல்லையில்லாத்
தேவைகளைக் கூட்டியதால்
தேடலில் தொலைகின்றோம்...

தன்னிடம் கிடைப்பதை
விட்டுவிட்டு
தானையமாய் திரிவதில்
நாம் தீவிரவாதிகள்...

சுயநலம் என்பது
நமக்கு
மற்றவர்களோடு அல்ல
நம்மிடமே...

அனைத்தையும்
ஆசைக்கு அடகுவைத்து விட்டு
அந்த அனைத்திலும்
தன்னை மீட்க தவறுகிறோம்...

சின்ன சின்ன அறிவுகளில்
சிறைப்படும் நம்மால்
சம்பூரண அறிவுப்பெற்று
விடுதலையாகத்
தெரியவில்லை
பெய்வது
ஞானமழை
சாரலுக்கு தேவையில்லை
குடை...!

சனி, ஆகஸ்ட் 22, 2009

மறதிநினைத்து நினைத்து
நிம்மதி இழக்கவைக்கும்
நினைவுகள்...

மறதி இல்லையெனில்
மனிதனிடம்
வாழ்க்கையில்லை
மறப்பதால்
மனம் மலர்கிறது
வாழ்வு சுவைக்கிறது....

மன்னிக்க தெரிந்திந்தவர்களும்
மறக்க துணிந்தவர்களும்
மாசில்லா மனிதர்கள்...

நிகழ்வை
மறந்தவர்களுக்கு
அதை நினைவுப்படுத்தி
அதில் நிம்மதி காண்பவர்கள்
நிகாதனர்கள்...

மறக்க வேண்டியதை
நினைப்பதும்
நினைக்க வேண்டியதை
மறப்பதும்
மனித குணமல்ல...

அன்பை மறப்பவன்
அனாதை
பண்பை மறப்பவன்
பாதகன்
பாசத்தை மறப்பவன்
பாவி
நீதியை மறப்பவன்
நீசன்
தன்னை மறப்பவன்
தாசன்...

நீக்கமற கலந்திருப்பவனை
நித்தமும் மறப்பதினால்
நீ நானெனும் வேற்றுமை
பிறக்கிறது
தெளிய வேண்டிய
ஒற்றுமை மறக்கிறது
அதனால் நேயம்
மரணிக்கிறது...!

சனி, ஆகஸ்ட் 15, 2009

கொடைவறுமை வெறுமையாவதற்கு
வளமானவர்கள்
வள்ளலாகவேண்டும்

வாரிஇரைக்க வேண்டாம்
ஏழைகளுக்கான
வரிகளை வரம்பு மீறாமல்
வழங்கினாலே
நாம் வள்ளல்தான்

மதம் பார்த்து கொடுப்பது
கொடையல்ல
மனிதம்மறிந்து அளிப்பதே
கொடை

செத்தும் கொடுத்தார்
சீதாகாதி
இவரைப்போன்றவர்களை
இன்றும் இறவாமல் செறிவுடன்
வாழ்த்திக்கொண்டிருக்கிறது
கொடை

இருப்பவர் பொருளையும்
இல்லாதோர் இன்சொல்லையும்
இணக்கத்துடன் ஈதலே
கொடைதான்

நடைப்பாதையில்
நறுக்கென தைக்கும் முள்ளை
நளினமாய் நகர்த்துவதும்
கொடையென்றார்கள்
நபிகள் நாயகம்

அறியாதவருக்கு
அரிவரி கற்பிப்பதும்
குணம் சிதராமல்
குடும்பத்தாருடன் கூடிமகிழ்வதும்
கூழைமைத் தவறாமல்
நடப்பதும்
மனம் நோகாமல்
மனிதர்களிடம் மணப்பதும்
விவேகியாய்
விட்டுக் கொடுப்பதும்
நாம்
மனிதனாய் சமைந்ததற்கு
நம் வாழ்க்கையில்
கொடுக்க வேண்டிய
கொடை...!

திங்கள், ஆகஸ்ட் 10, 2009

தற்கொலைகள்


மரணத்தைக் கண்டு
அஞ்சினாலும்
கெஞ்சினாலும்
மரணம்
கட்டித்தலுவாமல்
கடப்பதில்லை
எந்தநேரத்திலும்
மரணிக்கப்போகும்
நமக்கு
அது எப்போது என்பது
மட்டும்
திரையிடப்பட்டிருக்கிறது
திறந்திருந்தால்
மரணபீதியில்
ரணமாகும்
மனிதவாழ்க்கைகள்...

இயல்பாய்
தழுவவேண்டிய மரணத்தை
சிலர்
இனம் மனம்
மதம் நிறம்
மொழி மோப்பு
பொருள் வறுமை
இவைகளுக்காக
பொறுமையிழந்து
இன்னுயிரை
இழப்பதற்கு இசையும்
தற்கொலைப் பிரியர்கள்...

தன்னைக் கேட்காமல்
தான் பிறந்தபோது
தன்னைத் தான்
கொலைச் செய்துக் கொள்வது
எப்படிப் பொருந்தும்...?

உயிரைவிட்டு விடுவதால்
உறவாய் வந்த பிரச்சனைகள்
உதிர்ந்துவிடுமா...?
உலர்ந்துதான் விடுமா...?

உயிரைக்கொண்டு
பிரச்சனையைப் பார்ப்பதைவிட
அறிவைக்கொண்டு
பார்வையிட்டால்
அறவழி பிறக்கும்
அஞ்ஞானம் விழக்கும்...

எந்த எண்ணத்தில்
இறக்கின்றோமோ
அதே எண்ணத்தில்
எழுப்பப் படுவோம்
என்கிறது இஸ்லாம்...

உடலைமாய்த்துக் கொள்வதால்
ஆன்மா அமைதியடைவதில்லை
உடலை வைத்துதான்
உண்மையை விளங்கமுடியும்
தன்னையும் அறியமுடியும்...

தன்னைமாய்த்துக் கொண்டு
சார்ந்தவர்களுக்கு
சந்தாபம் தந்துவிட்டு
கோழையாய் பாடையில்
போவதைவிட
உடையவர்களுக்கு
உறுதுணையாய்
உணவாய் உணர்வாய்
உணர்ச்சியாய் உரிமையாய்
உயிர்தந்து வாழ்வதற்கு
உங்களை
தற்கொலை செய்துக்கொள்ளுங்கள

வியாழன், ஆகஸ்ட் 06, 2009

நான்...?


நான் சாதித்தவன்
நான் பாதித்தவன்
நான் திறமையானவன்
நான் உண்மையானவன்

நான் செய்தேன்
நான் கொடுத்தேன்
நான் வளர்த்தேன்
நான் எடுத்தேன்

இப்படி
நான் நான் என்று
வார்த்தைக்கு வார்த்தை
வரப்புக் கட்டுகின்றோமே
அந்த நான் யார்...?

அன்னைக்கு நான் மகன்
ஆசிரியருக்கு நான் மாணவன்
மனைவிக்கு நான் கணவன்
குழந்தைக்கு நான் தகப்பன்
உறவுக்கு தக்கவாறு
நாமம் மாறலாம்
நான் மாறுவதில்லை...

நான் என்பது யார்...?

நான் - நான்தான் என்போம்
நான் என்பது உடலல்ல
நான் என்பது உயிருமல்ல...

உடலுக்கும் உயிருக்கும்
உறவாய் இருப்பது ஆன்மா
உள்ளத்தில் உறைந்திருப்பது
அந்தராத்துமா...

பொருளறையிலிருந்து
புறப்பட்டு
கருவறையில் நுழைந்தோம்

தாம் யாரென்ற சிந்தனை
நம்மில் எழுந்தாலே
நாம் பாதி ஞானி
அதை விளங்கினாலே
பதிஞானி...

நான் என்பது பிரபஞ்சம்
ஐம்பூதங்களும்
அதில் தஞ்சம்
இதில் பெறவேண்டும் விஞ்ஞம்

ஜடத்தை வைத்து
நானை மட்டுப்படுத்துவதால்
மனிதம் மரணிக்கிறது
அநீதம் பிறக்கிறது...

நானை விளங்கி
நாம் வாழ்ந்தால்
நான் உனக்கு சகோதரன்
நீ எனக்கு சகோதரன்...!

புதன், ஆகஸ்ட் 05, 2009

உறவுகள்


இல்லாமையிலிருந்து
உருவானது
இருப்பின் உறவு...

இருப்பிலிருந்து
உதயமானது
படைப்பின் உறவு...

படைப்பில்
பயணமானது
உயிரினங்களின் உறவு...

உயிரினங்களில்
உதயமானது
தாய்மையின் உறவு...

தாய்மையில் தகுதியானது
கல்வியின் உறவு...

கல்வியில்
கரைச் சேர்ப்பது
குருவின் உறவு...

குருவைக் காண்பது
தேடலின் உறவு...

தேடலில் கிடைப்பது
தெளிவின் உறவு...

தெளிவில் தெரிவது
அறிவின் உறவு...

அறிவு உணர்த்துவது
சாந்தியின் உறவு...

சாந்தி சந்தித்தது
சமாதான உறவு...

சமாதானம்
சங்கமித்தது
ஆன்மாவின் உறவு...

ஆன்மா அமைந்தது
இறையின் உறவு...

இறை நிறைந்தது
இருப்பிலும்
இல்லாமையிலும் உறவு...!

சனி, ஆகஸ்ட் 01, 2009

உடன் பிறப்பு


தாயின் கருவரையில்
சேய்மையாய் பிறந்த உறவு...

உதிரம் ஒன்றானாலும்
வாழ்க்கையில்
உதிரக்கூடாத உறவு
சகோதரன் சகோதரி...

ஒன்றாய்ப் பிறந்து
ஒன்றாய் வளர்ந்து
ஒன்றாய் வாழ்வதில்
சிலர்
ஒற்றுமை இழப்பதேன்...?

கருத்துக் கலப்பில்
கரையேராமல்
குருத்துவம் இழக்கும்
இவர்களின்
குருதி உறவுகள்...

அவசர வாழ்க்கைக்கு
ஆசைகள் அதிகம்
அதனால்
அனைத்து தேவைகளுக்கும்
ஆசிரியராவது சுயநலம்...

விட்டுக்கொடுப்பதற்கு
பொருள் இருந்தாலும்
உறவை வெட்டுவதற்கு
பலர்
பொருளாகிறார்கள்...
நீயா...? நானா..?
சுயநலக் களத்தில்
சூனியனர்களாகும்
ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்...

கூடப்பிறந்தவர்களோடு
கூட்டாக வாழாதபோது
கூட்டர்களுடன் கூடுவதில்
குணம் சிறக்குமா...?

பக்கத்து வீட்டுக்காரனை
மன்னித்துவிடும் மனம்
பாசக்காரனுக்கு
அது கொடுப்பது
மரணத் தண்டனை...

பாசமும் அன்பும்
மதிப்புத் தெரியாதவர்களின்
மத்தியில்
மரணமாகிக் கொண்டிருக்கிறது...

இது
தாய்ப்பாலின் கலப்படமா
தாரம் தந்த பாடமா...?

யார் வகுப்பு நடத்தினாலும்
அங்கு பாசம் குருவானால்
வேசக்குரு கலைந்துவிடும்...

உறவோடு உறைந்தவர்கள்
பலரின்
உள்ளங்களில் வாழ்கிறார்கள்
உறவைத் துறந்தவர்கள்
தங்களின்
உள்ளத்தை தொலைக்கிறார்கள்...

தான் என்றத் தலைக்கணம்
தரையிரங்கினால்
நாம் என்ற ஒற்றுமை
தலைசிறக்கும்...!

செவ்வாய், ஜூலை 28, 2009

நேசம்


பிறந்தபோது
அன்னையை நேசித்தேன்..

வளரும்போது
உறவை நேசித்தேன்...

பழகும்போது
நண்பனை நேசித்தேன்...

பருவத்தில்
பெண்ணை நேசித்தேன்...

வியாபாரத்தில்
பொருளை நேசித்தேன்...

மணவாழ்க்கையில்
மனைவியை நேசித்தேன்...

இல்வாழ்க்கையில்
குடும்பத்தை நேசித்தேன்...

வயோதிகத்தில்
வாழ்க்கையை நேசித்தேன்...

மரணம் அழைத்தபோது
நினைவுக்குள் வந்தது
என்னை நேசிக்க மறந்தேனே...!

திங்கள், ஜூலை 27, 2009

ஆறாவது அறிவு
இறைவன்
பேரறிவாளன்
இயற்கை பேரறிவின்
பெருமதி
அறிவே இந்த அகிலத்தின்
வெகுமதி…

அறிவின்றி அணுவும்
அசைவதில்லை
அறிவில்லா உயிரினங்கள்
ஏதுமில்லை
அறிவில்லாமல் உயிரினங்கள்
உருவாவதுமில்லை...

ஆக்கமும் அழிவும்
அறிவின் வெளிப்பாடு
ஆதியும் அந்தமும்
பேரறிவாளனின்
திட்டப்பாடு...

உயிரினங்களில்
மனிதன் ஆறாவது அறிவில்
விளைகிறான்
விளையக்கூடிய மனிதர்களெல்லாம்
ஆறாவது அறிவில்
கனிகளாவதில்லை…

பேதங்களையும்
வாதங்களையும்
களையாமல்
அவனிடமுள்ள திரைகள்
விலகுவதில்லை...

தன்னை
நான் என்று பார்ப்பவன்
நானில்
தன்னை பார்ப்பதில்லை
தன்னையும் விண்ணையும்
காண்பதுபோல்
அனைத்தில் தன்னையும்
தன்னில் அனைத்தையும்
காணும்போது
ஏக உள்ளமையில்
எஞ்சாமைக் கொள்கிறான்
அவன்
தானே தன்னில் தானாகும் போதுதான்
பரிபூரண அறிவில் பரிணமிக்கின்றான்...

விஞ்ஞானிகள்
அறிவின் விளிம்பில்
வியக்கிறார்கள்
மெய்ஞ்ஞானியோ
அறிவின் பூரணத்தில்
பூக்கிறார்கள்...

மனிதன் மனிதனாக
வாழும்போது தான்
ஆறாவது அறிவு அவனில்
அடியீடாகிறது
அதுவரை அவன்
மொழியும் மிருகமே...!

செவ்வாய், ஜூலை 21, 2009

இருளும் ஒளியும்

படிப்பிருந்தும்
பணமிருந்தும்
பதவியிருந்தும்
பதிஞானமில்லா
மருள் கொள்ளும் மனம்
இருள் கொள்கிறதே....

வேதம் படித்தாலும்
வேகம் படியாத
வேற்றுமைக் களையாத
வேதந்தனையறியாத
வேற்றருக் கொள்ளும் வாழ்க்கை
மாற்றொன்றுமில்லாமல்
இருள் கொள்கிறதே...

ஏகனை வணங்கி
ஏகத்துவம் பேசி
எகத்தாளம் செய்து
ஆகத்துவமில்லாத
அஞ்சித்தம் செய்யும்
வாஞ்சைகள் அனைத்தும்
இருள் கொள்கிறதே...

கருவை அறிய
குருவைத் தேடி
அகவிருள் போக்கி
அன்பைத் தேக்கி
அருட்கண் திறந்து
புன்கண்னில்லா
புவியினிலே
பூரண இருள் நீங்கி
பிரகாசிக்கின்ற வாழ்க்கையே
ஒளிமயமானது...!

வெள்ளி, ஜூலை 17, 2009

கவிக்கோவின் கருத்துரைகள்


துபையில் கிளியனூர் இஸ்மத் எழுதிய மருளில்லா மலர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழாவில்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஆற்றிய உரை…


கிளியனூர் இஸ்மத் அவர்கள் எழுதிய நூல் இப்போது வருகின்ற கவிதைகளிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது
ஆன்மீகமணம் கமழும் நூலாக மருளில்லா மலர்கள் அமைந்திருக்கின்றன.அதுவும் இஸ்லாமிய ஆன்மீகமணம் கமழுகின்ற மலராக அமைந்திருக்கின்றன.எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

சமுதாயத்தில் நடக்கின்ற பல பிரச்சனைகளைப் பற்றியும் அவர் எழுதி இருக்கிறார்.இன்றைக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களைப் பற்றி அதற்கு அறம் வழிகளைப் பற்றி அங்கிங்கு எழுதியிருக்கிறார்.

குறைந்த பட்சம் வயதானவர்கள் தான் தத்துவஞானத்தை எழுதுவார்கள் இஸ்மத்துக்கு எவ்வளவு வயது என்பது எனக்கு தெரியவில்லை.50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தத்துவஞானம் இல்லையென்று சொன்னால் ஏதோ அவர்களிடம் கோளாறு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

வாழ்க்கையை பிரித்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.இறைவனிடம் துவாகேட்கும் போது இந்த உலகத்தின் நன்மையையும் அந்த உலகத்தினுடைய நன்மையையும் எனக்கு அருள்வாய் யா அல்லாஹ் என்று தான் கேட்கிறோம்.இந்த உலகிற்கு சில ஆண்டுக் காலங்களை நாம் ஒதுக்குகின்றோம் ஒதுக்கவேண்டும் அதில் நாம் விதைக்கப்படுகின்றோம்.

சிலர் காலமுழுவதும் உழைக்கிறார்கள் சாகும் வரையில் சம்பாதிக்கிறார்கள் அப்படிபட்டவர்களிடம் கீழான இச்சையே மிகைத்திருக்கும்.சம்பாதிப்பதற்கு ஒரு காலம் உண்டு.அதற்கு பிறகு நாம் யார்…? ஏதற்காக இங்கு வந்திருக்கின்றோம் நம் வாழ்க்கை என்ன..?
என்ற கேள்வி பக்கம் கவனம் செலுத்தாதவன் மனிதன் அல்ல.அவன் கனியாக வில்லை காயாகவே இருக்கிறான் காயாகவே இருந்து இறந்தும் விடுகிறான்.

வாழ்வதின் நோக்கம் என்னவென்றுக் கேட்டால் மனிதன் மனிதனாவதற்காக தரப்படுகின்ற ஒரு வாய்ப்பு. பெரும்பாலும் மனிதனாகாமலேயே இறந்து விடுகிறான்.
ஒரு புதுக்கவிதை நான் படித்த ஞாபகம்

பக்கத்து வீட்டு பரமசிவம்
எம்எல்ஏ ஆனார்
எம்பி ஆனார்
அமைச்சரானார்
ஆனால்
இறுதியில் மனிதனாகாமலேயே
மரணித்து விட்டார்..
இதில் என்ன வியப்பு எனறு கேட்டால் எல்லாப் பதவிகளையும் விட உயர்ந்தது மனிதப்பதவி இதை புரிந்துக் கொள்ள மறுக்கின்றான்.பல உலக பதவிகளுக்கு நாயாக அழைகின்றான்.

உலகிற்கு மனிதனை அனுப்புவதாகச் சொல்லி இறைவன் மிகப்பெரிய பதவியை கொடுத்துதான் அனுப்புகின்றான்.எனது கலீபாக்களை படைக்கப்போகிறேன் என்று இறைவன் யாரைச் சொல்கின்றான் ஆதம் அலைஹிவஸல்லாம்மை பற்றி மட்டுமா சொல்கின்றான்…இல்லை நம்மை எல்லாம் சேர்த்து தான் சொல்கின்றான். இறைவன் தந்திருக்கும் மிகப்பெரிய பதவியை மனிதன் உணர்ந்தவனாக இல்லை.உலக அற்ப பதவிகளுக்கு அலைகிறான்.

இந்த உலகத்தை ஆளுகின்ற மாபெரும் பொறுப்பை அல்லாஹ் கொடுக்கின்றான் ஆளுகின்ற சக்தியை நாம் பெறவேண்டுமென்றால் அதற்கு என்ன வேண்டுமென்று அல்லாஹ் கூறுகிறான்.ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களுக்கு இஸ்முக்களை கற்றுக் கொடுத்தான்.பெயர்களை கற்றுக் கொடுத்தான் அதுமட்டுமல்ல படைப்புகளைப் பற்றியும் படைப்பின் நுணுக்கங்களைப் பற்றியும் அதன் தன்மையென்ன எவை எவைகள் எப்படி இயங்குகின்றன இவைகளை யெல்லாம் கற்றுக்கொடுக்கின்றான்.ஏன் என்று சொன்னால் இவைகளை தெரிந்துக் கொண்டால் தான் கலீபாவாக பிரதிநிதியாக இருந்து ஆளமுடியும்.இது ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களுக்கு மட்டும் தரப்படவில்லை.அவர் காலத்திலேயே தரப்பட்டிருந்தால் செய்யப்பட்டிருந்தால் அவரே கம்பியூட்டரை கண்டுப்பிடித்திருக்க வேண்டும் டிவியை கண்டுப்பிடித்திருக்க வேண்டும் ஆனால் அப்படியா இல்லை…

ஒரு சிப் மாதிரி தயார் செய்து நமக்குள்ளே வைத்துவிட்டான்.
ஓவ்வொரு காலத்திலும் வருபவர்கள் ஒவ்வொன்றாய் கண்டு பிடித்து இந்த பஞ்சபூதங்களையும் ஆள்வார்கள்; அதற்கு அடையாளமாகத்தான் மலக்குகளைப் பார்த்து சஜ்தா செய்யச் சொல்கிறான்.அப்படி என்றால் என்ன அர்த்தம் அவனுக்குள்ளே நான் இருக்கிறேன் என்பது குறிப்பு.
சஜ்தா செய்யச் சொன்னது ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களை அல்ல.
ஊதினானே ஆவி அதனுல் அவன் இருக்கிறான்.ஆகவே நான் உள்ளே இருந்து ஆளுவேன் இவன் நாளை உலகை ஆளுவான் அதற்கு ஆளுகின்ற பொதுக் கட்டளைக்கு கீழ்படியவேண்டும் படிவீர்கள் என்று கூறுகிறான்.

இரத்தம் சிந்தும் கூட்டத்தையா படைக்கிறாய்…? குழப்பம் விளைவிக்கும் கூட்டத்தையா நீ படைக்கிறாய் என மலக்குகள் நினைத்தார்கள்.மனிதப் படைப்புகளிலிருந்து நாங்கள் மேலானவர்கள் எங்களை விட்டு விட்டு எப்படி நீ படைக்கலாம் என மலக்குகள் நினைத்துக் கொண்டார்களே அதற்கு பதிலாக இறைவன் மலக்குகளை அழைத்து இவைகள் எல்லாம் என்ன…? சொல்லுங்கள் என்றான்…
மலக்குகள் எங்களுக்கு தெரியாது என்றார்கள். நீ என்ன சொல்லித்தந்தாயோ எதைக் கற்றுத் தந்தாயோ அதைத் தவிர வேறொன்றும் தெரியாது..என்றார்கள்.
சொந்தமாக கற்றுக் கொள்ளத் தெரியாது ஆனால் மனிதனுக்கு சொந்தமாக கற்றுக் கொள்ளத் தெரியும். மலக்குகளை விட பெரிய ஆட்கள்.
அல்லாஹ் அழைத்தான் ஆதம் அலைஹிவஸல்லாம் வந்தார்கள் இவை என்ன என்று கேட்டான்.ஒவ்வொன்றையும் கடகட வென கூறினார்கள்.
மலக்குகளைப்பார்த்து அல்லாஹ் சொன்னான் இப்பொழுது தெரிகிறதா..?என்று.மலக்குகள் உணர்ந்தார்கள் நம்மை விட பெரிய சக்தி வாய்ந்த படைப்பு மனிதன் என்று.

நீ மனிதனா..? என்று இறைவன் கேட்கிறான் யாரைப்பார்த்து கேட்கிறான் மாட்டைபார்த்தா கேட்கிறான் மனிதனைப் பார்த்து தானே கேட்கிறான்.
நமக்கும் சந்தேகமாக இருக்கு… மனிதனாக பிறக்கும் ஒருவன் வடிவத்தில் மனிதனாக பிறக்கின்றான் கடைசியில் யாராவது ஒருத்தர் மனிதன்னா இவன் தான் மனிதன் என்று சொன்னால் தான் அவன் மனிதன்.
இறப்பதற்கு முன்னாடி யாரையாவது கூப்பிட்டு அவன் கேட்கவேண்டும் நான் யார்…? மனிதனா…!
பலர் மனிதனாக ஆகாதபோது கவிஞராவதெப்படி..இந்த சிந்தனைகள் மனிதனுக்கு வரவேண்டும்.

இந்த சிந்தனைக்கு வருபவர் சாதாரண கவிஞன் அல்ல கவிஞர்களிலிருந்து உயர்ந்தவர்கள் அவர்களை கவிஞானி என்று சொல்கிறோம்.உலகத்தில் அதிகமாக உலக கவிஞர்களால் பாராட்டப் படுகின்றவர்களெல்லாம் ஞானக்கவிஞர்கள் தான்;.

இஸ்லாமிய கவிஞர்களில் கூட ஞானக் கவிஞர்களாக புகழப்படுபவர்கள் யாரென்றால் மௌலான ஜலாலுதீன் ரூமி அவர்கள்.
காரணம் பாரசீகத்தின் கவிஞரல்லவா…!படைபடையாக இருக்கிறார்கள்.ஆனால் மௌலானா ஜலாலுதீன் ரூமி அவர்கள் ஞானத்தினுடைய உச்சத்தின் ஒலியை பிரகாசத்தை கவிதைகளாக வடித்தார்கள்…பிரமிக்க வைக்கிறது. உலகத்தில் எந்த புத்தக கடைக்கு சென்றாலும் மாதத்திற்கு ஒன்று மௌலானா ஜலாலுதீன் ரூமி அவர்களைப் பற்றிய புத்தம் வெளிவருகிறது.இவர்களின் நூலை படித்துதான் இஸ்லாத்தை பலர் நேசிக்கிறார்கள். இன்று உலகம் ஞானக்கவிஞர்களால் தான் பிழைக்கிறது.

அந்த வகையிலே தமிழ்நாட்டில் ஞானக்கவிஞர்கள் மிகக் குறைவு.பழைய ஞானக்கவிஞர்கள் இருந்தார்கள் பீர்முஹம்மது அப்பா குனங்குடி மஸ்தான் சாஹிப் போன்ற ஞானக்கவிஞர்கள் ஏராளமான இலக்கியங்கள் சூபி தத்துவத்தை நமக்கு சொல்லித் தந்தார்கள்.இன்னும் சொல்லப்போனால் சூபிஞானிகள் மூலமாகத்தான் நமக்கு இஸ்லாமே வந்தது.

இறைநேசச் செல்வர்கள் என்று சொல்கிறோமே அவர்களெல்லாம் யார்…? சூபி ஞானிகள்…அவர்கள் மூலமாகத்தான் நாமெல்லாம் சுத்தமடைந்து இன்று முஸ்லீம் என்று சொல்லிக் கொள்கிறோம்…இல்லை யென்றால் எந்த சகதியோடு சகதியாக கிடந்திருப்போமோ…நமக்கு நன்றி வேண்டாமா…? எவ்வளவு சுத்தம் செய்து முஸ்லீம் என்று சொல்லிக் கொள்ள பெருமை கொடுத்துள்ளார்கள்…இப்படிபட்ட ஒரு சேவையை செய்திருக்கிறார்கள்.ஆனால் இடையில் பெரிய இடைவெளி வந்துவிட்டது…
அது எந்தளவு என்றால் கவிதையே ஹராம் என்று சொல்லும்மளவு…
குர்ஆன் கண்டிக்கிறது ஹதீஸ் கண்டிக்கிறது என்று கவிதைகளை படிக்க விடமறுக்கிறார்கள்…குர்ஆனை ஒழுங்காக புரிந்துக் கொள்ள மாட்டேன்கிறார்கள்.

மூன்று கவிஞர்களை ஆஸ்தான கவிஞர்களாக ரசூல் ஸல் அலைஹி வஸல்லாம் அவர்கள் தன் பக்கத்திலேயே வைத்திருந்தார்கள்.மஜ்திலேயே கவிதைகள் அரங்கேற்றிப் படிக்க சொன்னார்கள்..கவிஞர்களுக்கு பொன்னாடை போர்த்துவதை ரசூல் ஸல் அலைஹி வஸல்லாம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.

கவிதைகளில் ஞானம் வெளிப்படுகிறது என்று பெருமானார் (ஸல் அலை) அவர்கள் கூறிய ஹதீஸ்பல இருக்கிறது…இதைப்பற்றி பேசவேண்டுமானால் நேரம் போதாது நான் இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லவேண்டி இருக்கிறது.

கவிஞர் கிளியனூர் இஸ்மத் அவர் எழுதிய கவிதை நூலில் ஏகத்துவ மெய்ஞான சபை என்ற தலைப்பிட்ட கவிதையில் கூறுகிறார்.

மதமற்ற மதமாகிய
மெய்ஞானத்தை
சுவைப்பவர்கள்
என்கிறார்
ஞானம் என்ன செய்கிறது என்றால் கீழ்நிலையில் மதமுற்று இருப்பதை வெளியில் கொண்டு வருகிறது. அகண்ட உண்மை என்ற ஒரு மாபெரும் சக்தியை திரட்டுகிறது. ஞானிகளில்
இஸ்லாமியஞானி கிருத்துவஞானி இந்துஞானி என்று வித்தியாசம் கிடையாது. உண்மைக்கு வித்தியாசம் கிடையாது.
அதேபோல் இன்னொரு இடத்தில் கூறுகிறார்

இவர்கள்
ஞானம் பயில்வது
ஞானியாவதற்கல்ல
மனிதனாக வாழ்வதற்கு
என்கிறார்
ஞானியாகி காட்டுக்கு போய்விடுவதற்கல்ல. நாம் யார் என்று தெரிந்தால் மனிதனாகலாம். மனிதனாவதற்கு ஞானம் உதவுகிறது என்று கவிஞர் இஸ்மத் அழகாக கூறுகிறார்.
அடுத்து ஒரு கவிதையில்
மனிதா நீ என்பது யார்…?

நான் இவ்வளவு பேசினேனே அதை சாராக பிழிந்து கவிஞர் பேசுகிறார்.
மனிதா
உன்னை மனிதனென்று நீ
என்றாவது உணர்ந்ததுண்டா…?
உணர்வதற்குரிய வாய்ப்பு
உனக்கு
கிடைத்ததுண்டா…?

பூமியில் இந்த உலக வாழ்க்கையிலே நாம் நம்மைபற்றி உணர நேரம் கிடைக்க வில்லை. சாப்பிடுகிறோம் பொருள் தேடுகிறோம் மீண்டும் சாப்பிடுகிறோம் பொருள் தேடுகிறோம் கிட்டதட்ட இயந்திர தனமான வாழ்ககை. மனிதன் பொருள் தேடிக்கொண்டே இருக்கிறான் அவன் இறக்கும்வரையில். பொருள் தேடக்கூடாது என்பதல்ல அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறது…வாழ்க்கை முழுமையும் அதற்காக சிலவு செய்யக் கூடாது.
அடுத்த வரியில் இஸ்மத் கூறுகிறார்
படைக்கப்பட்ட நீ
உன்னைப் பற்றி
தெளிவில்லாத போது
உன்னைப் படைத்த
இறையை நீ
எப்படி தெளிவாய்
விளங்கிருப்பாய்…
மிக பயங்கரமான கேள்வி இது
பெரிய மனிதன் மாதிரி இவன் தத்துவம் பேசுகிறான் பழகுகிறான் முதலில் நீயாரென்று தெரியுமா உனக்கு…? நீ யாரென்றே தெரியவில்லை உன்னைப் பற்றி விளக்கமில்லை நீ இறைவனைப்பற்றி எப்படி விளங்கிருப்பாய் என்று ஆணித்தரமாக கேட்கிறார்.
அதனால்தான் இறைவனைப் பற்றிய கருத்துரைகள் மனிதனிடம் தவறாக இருக்கிறது அதைப்புரிந்துக் கொள்வது கடினம்.
அடுத்த வரியில் கூறுகிறார்
மனிதா
மதத்தை நேசிக்குமளவு
மனிதர்களை
உனக்கு வாசிக்க தெரியவிலை;லை
நேசம்
மதத்திற்கு தேவையில்லை
மனிதனுக்குத் தேவை…
என்கிறார்.
இன்றைய்ய நிலையில் மதம் என்றால் கெட்டவார்த்தையாக மாற்றி விட்டார்கள். ஒருவரை யொருவர் இகழ்வது பகைப்பது அழிப்பது …இது தான் இன்றைக்கு மதம்.
மதம் மனிதனை மனிதனாக்கும் பட்டரை என்கிறார்
இதை புரிந்துக் கொண்டால் மதக்கலவரம் ஏற்படாது. ஏந்த மதமும் இன்னொரு மதவாதியை பகைக்க சொல்லவில்லை மனிதர்களை மனிதர்களாக்குவது தான் மதத்தினுடைய்ய வேலை.அப்படி இல்லாமல் ஒருவரை யொருவர் பகைவர்களாக ஆக்குகிறது என்று சொன்னால் கோளாறு மதத்தில் இல்லை மனிதனிடம் தான் அவன் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை.
நல்ல தருணத்தில் ஒரு சிறந்த நூலை நல்ல சிந்தனையுடன் கவிஞர் கிளியனூர் இஸ்மத் வெளியிட்டிருக்கின்றார்.
இஸ்மத் அவரை வாழ்த்துகின்றேன் இன்னும் மென்மேலும் நல்ல ஆன்மீக கவிதைகளை நலமாக படைத்து மனிதர்களுக்கு உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன என்று புரியவைத்து ஒவ்வொருவரையும் உயர்த்துகின்ற மாபெரும் கடமையை அவர் தொடர்ந்து செய்திடவேண்டி வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி…!

வியாழன், ஜூலை 16, 2009

கோடையும் வாடையும்
கோடையும் வாடையும்
வாழ்க்கை பயணத்தின் ஆடை
வடகாற்று வாசனையில்
நம்மனம் தேடுவது ஒடை …

கோடைக்கால மேகத்தில்
ஜாடைத் தேடும் நம்கண்கள்
வாடைகாற்று வீச்சத்தில்
வாடிவிடும் குடும்பபெண்கள்…

ஏழைகளின் வாழ்க்கையில்
என்றுமே வரட்சியான கோடை
ஆனால்
ஏந்தலர்கள் எத்தனித்தால்
ஏழ்மை
பெற்றிடும் கொடை

பாலைவன மனிதர்களுக்கு
வீசும்
பாசத்தின் வாடை
சோலையாகும் வாழ்க்கைக்கு
இவைகள்
என்றுமே இல்லை தடை

உஷ்னத்தில் உருவாகுவது
உயிர்களின் ஊட்டம்
ஆனால்
உக்கிரத்தில் உருகுலைவது
மனித உறவின் ஆட்டம் …

புறத்தேடலில் வீழ்பவனுக்கு
வசந்த காலமும் கோடைதான்
ஆனால்
அகத்தேடலில் முழ்கியவனுக்கு
எக்காலமும் வாடைதான் …

செவ்வாய், ஜூலை 07, 2009

பூர்வீகம்

பிறந்த ஊரும்
வளர்ந்த நாடும்
வாழ்பவர்களுக்கு
பூர்வீகம் என்று
பூரிப்பு

புறப்பட்ட இடத்தை
புரிந்துணர பலருக்கு
புரியாத புதிர்

புகலை தான்னென்று
புகழ்ச்சிக் கொள்வதால்
பூரணம் நமக்கு
புதையல்
உலகறிவு உரியவருக்கு
பொருள் கொடுக்கும்
ஆன்மறிவு அனைவருக்கும்
அமைதிக் கொடுக்கும்

பூர்வீகத் தேட்டம்
நம்மிடம்
புரட்சி செய்தால்
புத்தி பூகம் விலக்கும்

பின்நோக்கி
புலன்
பின் தொடர்ந்தால்
முன்நோக்கி
பூர்வீகம்
முக்தித் தரும்

தாயின் கருவரையில்
உருவானோம்
தந்தையின் உதிரத்தில்
அருவானோம்
உணவுப்பொருட்களில்
கருவானோம்
பஞ்சபூதங்களில்
கலவையானோம்
சூத்திரத்தின்
சூக்குமம்மானோம்
சூக்குமத்தில்
சூனியமானோம்


இவைகள்
அனைத்தையும்
மறக்களானோம்
வாழ்க்கையில்
மயக்கமானோம்...!

வெற்றி

வெற்றியும் தோல்வியும்
வீரனுக்கு அழகு
இது வெறும்பேச்சல்ல
மனசுக்கு மருந்திடும்
வார்த்தை

வெற்றிப் பெறுவதற்கு
வாட்கையில்
வட்டமிடுகிறோம்
சிலர்

வாட்டம் பார்க்கிறோம்
கொண்டக் கொள்கையில்
கொடித்தண்டாய்
கோணம்ப் பார்க்கிறோம்

தோள் கொடுத்தவர்களுக்கு
தேளாய் கொட்டிவிட்டு
தெம்மாங்குப் பாடுகின்றோம்

வெட்டுவதில் வெற்றி
கட்டுவதில் வெற்றி
குத்துதலில் வெற்றி
கூத்தாடுதலில் வெற்றி
பொருள் தேடலில் வெற்றி
பதவி பறிப்பதில் வெற்றி
வெற்றியென
வேதைப்படும்
பேதைமனிதர்கள்

இவர்களுக்கு
வெற்றி இதுவென்றால்
தேவைக்கும் மேல்
தேடியப் பிறகும்
ஆசைக்கும் மேல்
அனுபவித்தப் பிறகும்
தெளிய வேண்டிய மனம்
தொல்லைப் படுவதேன்
தொடக்கம் தேடுவதேன்...?

மனிதனாக வாழ்வதில்
பொருமையாளனாக பூப்பதில்
பூரணத்தோடு கலப்பதில்
மட்டுமே
வெற்றியென்பது
வெற்றிடமில்லாமல்
வேறுன்றியிருப்பதை
எப்போது
நினைவுப்படுத்தி
வெற்றிக்கொள்ளப்போகிறோம்...!

புதன், மே 27, 2009

கவனமாகயிரு...இளைஞனே
வாழ்க்கையை லட்சியத்தோடு
வாழ்ந்து வெற்றிபெற வேண்டிய
நீ
சிலரது வார்த்தைகளில்
உன்னை இழந்துவிடாதே
கவனமாகயிரு...

மருத்துவனாக
கணினியாளனாக
விஞ்ஞானியாக
பொறியாளனாக
இதில் ஏதோன்றாய்
நீ
சமைந்திடவே உன்னை
சமைத்தவர்களின் கனவு
அதைக் கலைப்பவர்களின்
கைகளில் சிக்கிவிடாதே
கவனமாகயிரு...

பள்ளிப்பாட நூல்களை
சுமக்கவேண்டிய உன் கரங்களில்
கலவரச்செய்திகளையும்
மதவாதப் பிரச்சனைகளையும்
சுமந்து வரும்
பத்திரிக்கைகளைத் திணிக்கப்படுவதை
அனுமதிக்காதே
கவனமாகயிரு...

கல்லூரி வாயில்களில்
சில புல்லுருவிகளின்
கோலங்கள்
உன்தோழமைக் கண்ணோட்டத்திற்கு
அவர்கள் அணியவிப்பது
மதவாதக் கண்ணாடி
கண்ணிலியாய்
நீ
உன்வகுப்புத் தோழர்களுடன்
வகுப்பு வாதம் செய்வதற்கு
கவனமாகயிரு...

சமுதாயம் என்றச் சாயத்தில்
உன்னை நிறமேற்றி
உனக்கு ஒருவர்ணத்தை
கொடுப்பதற்கு சிலர்
தருணம் பார்க்கிறார்கள்
உன்னைத் தாரைவார்த்து விடாதே
கவனமாகயிரு...

எங்கோ நிகழக்கூடிய
சில சம்பவங்கள் படமெடுக்கப்பட்டு
உன் சிந்தை அரங்கில்
திரையிடுவதற்கு
திட்டங்கள் தயாராக்கப்படுகிறது
அதை நீ
தீண்டிவிடாதே
கவனமாகயிரு...

தடுக்கப்படுகிறோம்
ஒடுக்கப்படுகிறோம்
நசுக்கப்படுகிறோம்
என்றத் தலைப்புக்களில்
மூலைச்சலவைகள் செய்து
முணைப்போடு

முறச்சிப்பார்கள்
மருள்கொண்டு விடாதே
கவனமாகயிரு...

வேதத்தைக் காண்பித்து
ஞானம் போதிக்கின்றோம்
கலங்கரை விளக்காய்
நேர்வழிக் காட்டுகிறோம்
என்று
மெய்ஞானாம் அறியவேண்டிய
உன்னை
அஞ்ஞானியாக்கிவிடுவார்கள்
கவனமாகயிரு...

மனிதநேயத்தை
நீ
விதையுண்டிருக்கிறாய்
அது துளிர்விடுவதைத் துண்டித்து
தீவிரவாதம் பேசி
சுதந்திரமாய் வாழவேண்டிய உன்னை
நான்கு சுவருக்குள்
சிறைவைத்து விடுவார்கள்
கவனமாகயிரு...

நீ என்பது இன்னொருவனின்
ஆளுமையல்ல
நீ சுயமிக்கவன்
சூத்திரம் நிறைந்தவன்
உன் பலம் தெரியாமல்
உன்னை பலவீனர்களிடம்
ஒப்படைத்து விடாதே
கவனமாகயிரு...!

செவ்வாய், மே 26, 2009

எச்சில் மனிதர்கள்...சேற்று மனிதர்கள்
வீட்டின் வாசல்வரை
நேற்றைய்ய துளசி
பூஜையறைவரை...

உண்டதுப் போக
மிச்சத்தைக் கொடுப்பதற்கில்லை
எச்சத்தைக் கொடுக்கும்
எச்சில் மனிதர்கள்...

இடுப்பில் துண்டு
அடுப்பில் கஞ்சி
உழைப்பில்லா சோம்பேறிகளா
இவர்கள்

இல்லை இல்லை
இவர்கள்
இயந்திர மனிதர்கள்...

உற்பத்தியாகும்
பொருளுக்கு
முகவரிக் கொடுப்பது
இயந்திரமல்ல
முதலாழித்துவம்...

சுயத்தையறியா சுப்பிகளும்
சமத்துவம் பேசும்
அவத்துவவாதிகளும்
மனிதநேயம் பேசுவார்கள்
ஆனால்
தேவைப்படுகிறது இன்றும்
சாதிச் சான்றிதழ்கள்...

எத்தனை மாற்றங்கள்
நிகழ்ந்தாலும்
மாறவில்லை
சுடுகாட்டுக் குடில்கள்...

கருவறிந்த மனிதர்கள்
அருவறிந்த புனிதர்கள்
அரசியல் களம்
அமைத்தால் தான்
சுயமறிந்த
சூரிய வாழ்க்கை
தலீத்களுக்கு மட்டுமல்ல
தரணியில் வாழும்
மனிதர்களுக்கு...!

திங்கள், மே 25, 2009

முதல்வன்ஆதிமனிதன் ஆதமே
அகிலத்தின் முதல் மனிதன்
அதனால்
ஆண்டவன் சொல்கிறான்
ஆதமே முதல்வனென்று...

வாழ்க்கையைப் பலர்
போட்டிகள் நிறைத்து
பேட்டிகள் கொடுத்து
வாய்மையைக் குலைத்து
பொய்யன்பை வளர்த்து
போலிப் புன்னகையுடன்
வாழ்வை வென்றதாய்
நகைக்கும் இவர்கள்
சொல்லலாம்
நாங்கள் தான் முதல்வனென்று...

நாட்டை ஆள்பவர்களும்
நடனம் ஆடுபவர்களும்
நளினமாய் இருப்பவர்களும்
நவிலலாம்
நாங்கள் தான் முதல்வனென்று...

கற்றதைக் கற்பிப்பவர்களும்
கற்பனைக் கலைஞர்களும்
கல்லூரி மாணவர்களும்
விற்பனை விற்பண்னர்களும்
விடைபகரலாம்
நாங்கள் தான் முதல்வனென்று...

அருள்வழங்கும் சாமியார்களும்
பொருள் குவிக்கும் குபேரர்களும்
இருள்மொழி அரசியல்வாதிகளும்
மருள்மொழி வழங்கலாம்
நாங்கள்தான் முதல்வனென்று...

முகத்திரை விலக்கினால்
அகத்திணை மலரும்
முதல்வனாய் முகடம்சூட
முன்னுரை வேண்டும்...

முதல்வன்-அவன்
முழுமணி மதியானன்
மனிதர்களில்
மனிதனாக வாழ்பவன்
மனிதநேயத்தைச்
சுவாசிப்பவன்
தான்யாரென்ற மெய்யறிவு
நிறைந்தவன்...

மதம்பேதமில்லாமல்
பதமை நிறைந்த இதயவன்
சோதனைகளைச்
சாதனையாக்குபவன்
எண்ணத்தில் ஏழையாகவாழ்பவன்
தர்மத்தை தர்மம்
செய்பவன்
அன்பை விளைவிப்பவன்
அவனே சம்பூரண மனிதன்
அவன்தான்

புதன், மே 20, 2009

எதைத் தேடுகிறோம்


பிறந்து அழுதபோது
அழுதத்தேடலென
அன்னைமூட்டிய
அமுதம் அருந்தினேன்

மழலையாய்
கேள்விகள் தொடுத்தபோது
வேதனத்தேடலென
வேதச்சாலை சென்றேன்

பள்ளிப் பருவத்தில்
துள்ளிவிளையாடிய போது
துளிர் விட்டத் தேடலில்
நட்பை நயங்கொண்டேன்
கல்விக் கடலில்
கலந்தபோது
கசடறகற்க்கும் தேடலில்
கரைந்தேன்

கல்லூரி நாட்களில்
கண்ணுணி பெண்ணுடன்
காதல் தேடலில்
கவர்ந்தேன்

வேலைத்டேலில்
வேர்வைச் சிந்தி
கிடைத்தவேலையில்
கலைப் பதித்தேன்

மனம் நிறைந்த மனைவி
குணம் கொண்ட குழந்தைகள்
பஞ்சமில்லாப் பணம்
குடும்பத்தேடலில் குடிக்கொண்டேன்

உலக வாழ்க்கைக்கு
தேவையானத் தேவைகளை
பூர்த்திக் கொண்டேன்
தேடிய அனைத்தையும்
எண்ணத்தில் எழுதிக்கொண்டேன்

எல்லாம் தேடியும் மனம்மட்டும்
எதையோத் தேடுகிறது
இன்னும் தேடலைத்தேடுகிறது
அது
மரணத்தேடல் அல்ல
“நான்” யெனம் மனிதத்தேடல்
அதுவே பூரணத்தேடல்...!

செவ்வாய், மார்ச் 24, 2009

உழவுவீதியோரம் வண்ணத்துப்பூக்கள்
நம்
விழியோரம் ஆனந்த
மகிழ்நீர்த்துளிகள்

பச்சைநிறப் பயிர்களில்
இச்சைக்கொள்ளும்
நம் விழிகள்
இது
உழவனின் வேர்வைத்துளிகள்

விவசாயமில்லாத நாடு
உயிரில்லா எழும்புக்கூடு
பயிர்களின் வளர்ச்சியே
உயிர்களின் உணர்ச்சி
உழவனின் நம்பிக்கைத்தான்
நாட்டின் அஸ்திவாரம்

அழும்குழந்தைக்கு
அமுதம் ஊட்டுவதைப்போல்
வாடும்பயிர்களுக்கு
பாசனம்மட்டுமல்ல
பாசத்தையும் ஊட்டும்
உழவர்கள்
உணவுபண்டங்களுக்காக
மண்ணை உழுது
பயிர் செய்யும் நாம்
மனதை உழுது
மனிதனாவது
எப்போது...?

பணம்பாசவண்ணத்தில்
வாழ்க்கைகூட்டை
வடிவமைத்து
நேசஎண்ணத்தில் நெறிபடுத்தி
நேர்ந்தாரையும்
சார்ந்தோரையும்
சடதிச் செய்யமுடியுமா...?

பிச்சைப் பாத்திரம்ஏந்தும்
இச்சைமுத்து
பச்சைநிற வாகனத்தில்
வளம்பெற முடியுமா...?

கயல்விழியோடு
காதலில் முழ்கி
மனம்கலந்த மனங்கள்
காதலைமறக்க முடியுமா...?

பல்லாக்கு தூக்கும்
பணியாளன்
பவனிவரும் அரசனைப்போல்
அரசாளத்தான் முடியுமா...?

தேன்கூட்டைக் காக்கும்
தேனிக்களை
ஒருகல் விட்டால்போதும்
கலைந்துவிடுவது போல்
முடியாத முயற்சிகளை
முடித்துவிடும்
முறித்தும்விடும்
பணம்...!

வியாழன், மார்ச் 05, 2009

ஏகத்துவம்
இரண்டு என்பதை
ஒன்றெனக்கூறுவது
ஏகத்துவம்...

தன்னையும்
படைத்தவனையும்
வேறுப்படுத்தி மாறுப்படுவது
துவைதம்...

துவைதவாதிகளே
தூயவனுக்கு
துணைவைப்பவர்கள்...
தன்னிலே சர்வத்தையும்
சர்வத்தில் தன்னையும்
காண்பதே அத்வைதம்...

அத்வைத அறிவு
இல்லையெனில்
ஆண்டவனைத் தரிசிக்க
முடியாது...

ஆன்மீகம் என்பது
ஆடையில் இல்லை
அது
அறிவில் தெளிவில்...

இறைதரிசனம் பெறுவதற்கு
நிறைவான குருத்தேவை
வழிக்காட்டல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை...

ஞானம் பெற
எளிமையான எண்ணமும்
தெளிந்த மனமும்
அறிந்துணர ஆர்வமும்
நம்மில் அதிகரித்தாலே
ஏகமும் ஏழ்மையும்
நம்மிலே எழிலுறும்...!

திருவாகி யாங்கும் யாவும்
இல்லையென்றிலாது
நிறைந்தும் விரிந்தும்
பரவியும் விரவியும்
எதுகையிலாது
அனைத்துமாய் நின்றியங்கும்
ஒன்றே ஏகம் என்றுரைத்தார்கள்
எம்குருநாதர்...!