செவ்வாய், நவம்பர் 24, 2009

தியாகத் திருநாள்


நபி இபுராஹிமுக்கு
நழுவிப்போன நனவில்
அவரைத் தழுவிக்கொண்டது
நான்-என்ற எண்ணம்...

தவமிருந்து தரித்த தனையனை
தத்துவமறந்து தழுவியதால்
அல்லாஹ் ஆணையிட்டான்
அறுத்துவிடு...

அவரின் ஏகஉள்ளமையில்
ஏற்பட்ட தடுமாற்றம்
பெற்றபாசம்
படைத்தவனை
எண்ணத்திலிருந்து
பாலையாக்கியது...

நான்-என்ற சுயநலத்தை
அறுத்து
நாம் என்ற சுயத்தை
அருந்த வேண்டிய ஆணை...

இருப்பதும் இல்லாமையும்
இறையாகும் போது
அறுப்பதும் அறுக்கப்படுவதும்
பேதமாவதில்லை...

அறுப்பது நானாக இருந்தாலும்
அறுக்கப்படுவதில்
நான் இருக்கவேண்டும்
அது தான் குர்பான்...

இது தீர்க்கதரிசிக்கு
இறைவன் தந்த
தீர்ப்புமட்டுமல்ல
தீனோர்க்கு இட்டகட்டளை...!

ஞாயிறு, நவம்பர் 15, 2009

நாம் விடையா வினாவா…?தன்னை அறிய நாடியது
விடை
பிரபஞ்சமானது
வினா…

வினாவும்
விடையும்
வேறு வேறு
கோணங்களல்ல
கடலும் அலையும்போல
தங்கமும் நகையும்போல…

விடைகளைத்தேடி
பயணிக்கிறோம்
நாம்
வினாக்களல்ல…

விடைகளால்
தடுக்கப்படுபவைகள்
வினாக்களால்
உடைக்கப்படுகிறது…

தேர்வு
விடைகளுக்கல்ல
வினாக்களுக்கு…

விழுந்தது
விடையானதால்தான்
நியூட்டன்
வினாவானான்…

இருளும் ஒளியும்
விடையானதால்தான்
எடிசன்
வினாவானான்…

அறியப்படுவதெல்லாம்
விடைகளல்ல
ஆனால்
அனுபவிக்கப்படுதெல்லாம்
வினாக்கள்…

வாழ்க்கை
விடையாகத்தான் இருக்கிறது
பலருக்கு
வினாக்கள் தெரியவில்லை

விடைத்தேடும்
விடைகள்
வினாக்கள் ஆவதில்லை
வீணாகிக் கொண்டிருக்கிறது…

விடை
மர்மமல்ல
வினாத்தான்
கர்மமாக இருக்கிறது…

நாம் யார் என்று
வினாவைக் கேளுங்கள்
நாம் என்றே
விடைக் கொடுக்கும்…

அதனால் சொல்கிறேன்
நாம் வினாக்கள் அல்ல
விடைகள்…!