வியாழன், செப்டம்பர் 17, 2009

அனைத்திலும் அனைத்துமாய்....

இறைவா…!
நீ என் நம்பிக்கையில்
நிழலாடுகிறாய்
நீ என்பது நம்பிக்கை மட்டும்தானா?

எதையும்
கண்டு உண்டு தொட்டு முகர்ந்து
புணர்ந்து…இப்படி
வாழ்ந்துக் கொண்டிருக்கும்
எனக்கு
அருபமான உன்னை
என் மனக்கண் முன்
உருவம் கொடுத்து
பார்க்க முடியுமா?
அப்படிப் பார்த்தால்
உருவத்திற்குள் உன்னை
மட்டுப்படுத்தி
கட்டுப்படுத்தி
மிகப் பெரியவான உன்னை
சிறுமைப்படுத்தி விடுவதாகுமே…!

கல்லைவைத்து
கடவுளை காண்கிறார்கள்
சிலர் சொல்லை வைத்து உன்னை
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த இருவருக்கும்
என்ன வித்தியாசம்?

கையேந்தி உன்னிடம்
கேட்கும் போதும்
கையை மேலே காட்டி
பேசும் போதும்
தனிமையான உன்னை
நான்
தனிமைப் படுத்தி விடுவதல்லவா…!

வணக்கத்தின்போது
என்னை பார்த்துக் கொண்டிருப்பது போல்
அல்லது
நான் உன்னை பார்த்துக் கொண்டிருப்பது போல்
வணங்கச் சொல்கிறாய்
அப்படியானால்
நீ என்பது எண்ணமா?

உன் திருநாமத்தை
உச்சரித்தால்
நல்லடியார்களின் உள்ளம்
நடுங்கும் என்கிறாய்
அப்படியானால்
நீ என்ன அச்சமா?

எந்த அடியானாவது
தன் தூக்கத்தை விட்டு
பின்னிரவில் எனக்காக எழுந்து
வணங்குகின்றானா?
அடிவானத்திலிருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்று வேறு படுத்தி கூறுகின்றாய்
நீயென்ன துவைதமா?

என் பிடரியின் நரம்பிற்கும்
சமீபத்தில்
நம்முடைய நெருக்கம்
அதை நான் விளங்காதபோது
உன் வேதத்தை படித்துவிட்டு
போதனை செய்வதால்
நான் என்ன விளக்கவாதியா?

விளக்கமே இல்லாமல்
விழுந்து விழுந்து
உன்னை வணங்கிக் கொண்டிருப்பதால்
நான் என்ன வணக்கவாதியா?

வேதத்தை தந்தது
வேடம் களைவதற்குத் தானே
வேதம் படித்திருக்கிறேன் என்று
வாதம் செய்வதற்கா.?

வேடத்தை களைக்காமல்
வேதத்தையே படித்துக்கொண்டிருப்பதால்
நான் என்ன சீர்திருத்தவாதியா…?

ஒற்றுமையென்னும் கயிற்றை
பலமாக பற்றி பிடிக்கச் சொன்னாய்
பிரிந்திருப்பவைகளை
ஒன்றுப்படுத்துவதுதானே ஒற்றுமை
அதுதானே ஏகத்துவம்
இதில் இருக்கிறதே பல தத்துவம்
அந்த கயிற்றை பலமாகப்பிடிப்பதற்கு
எங்களின் கைகளில் பலமில்லையே…!

நெருப்பையும் களிமண்ணையும்
வேற்றுமைப் படுத்திய
ஷைத்தானின் எண்ணம்
நீவேறு
உன் படைப்பினங்கள் வேறு
என்று
ஒற்றுமையை துவைதப்படுத்திக் கொண்டிருக்கிறது.
உன்னை வேறுபடுத்துவதால்
இல்லை அவர்களிடம் ஒற்றுமை...

ஷைத்தானின் கைகளில்
வேதமிருப்பதால்
அப்பாவி கண்களுக்கு வேதம்தானே தெரிகிறது
வழிகெடுக்கப்படுவதை
அவர்களின் விழிக்கூட நம்ப மறுக்கிறதே…!

ஒரே சமுதாயமாக
வாழவேண்டியவர்கள்
ஒரு ஊருக்குள் பலபிரிவினர்களாக
பிரிக்கப்படுகிறார்கள்
ஒற்றுமையிலிருந்து சிதைக்கப்படுகிறார்கள்

இறைவா
நீ எங்கோ இருந்துக் கொண்டு
இயக்குவதாய் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களின் உள்ளத்தில் தெளிவில்லை
அதனால்
எண்ணத்தில் தூரமிருக்கிறது.

நீ அனைத்துமாக
அனைத்திலும் நீயாக இருந்து
இயங்குகின்றாய்
அனைத்திலும் நீயாக இருக்கும்போது
அந்த அனைத்தில் நானுமிருக்கிறேன்
இதை
எப்போது விளங்கப்போகிறார்கள்.?
இவர்களை நேர்வழிப் படுத்துவாயாக...!

3 கருத்துகள்:

  1. நீண்ட நேரம் வாசித்ததில்
    நீண்ட நேரம் யோசிக்க
    வைத்தது, கவிதை!

    பதிலளிநீக்கு
  2. \\இறைவா
    நீ எங்கோ இருந்துக் கொண்டு
    இயக்குவதாய் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்
    அவர்களின் உள்ளத்தில் தெளிவில்லை
    அதனால்
    எண்ணத்தில் தூரமிருக்கிறது.

    நீ அனைத்துமாக
    அனைத்திலும் நீயாக இருந்து
    இயங்குகின்றாய்
    அனைத்திலும் நீயாக இருக்கும்போது
    அந்த அனைத்தில் நானுமிருக்கிறேன்
    இதை
    எப்போது விளங்கப்போகிறார்கள்.?
    இவர்களை நேர்வழிப் படுத்துவாயாக...! \\




    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு