புதன், மே 27, 2009

கவனமாகயிரு...



இளைஞனே
வாழ்க்கையை லட்சியத்தோடு
வாழ்ந்து வெற்றிபெற வேண்டிய
நீ
சிலரது வார்த்தைகளில்
உன்னை இழந்துவிடாதே
கவனமாகயிரு...

மருத்துவனாக
கணினியாளனாக
விஞ்ஞானியாக
பொறியாளனாக
இதில் ஏதோன்றாய்
நீ
சமைந்திடவே உன்னை
சமைத்தவர்களின் கனவு
அதைக் கலைப்பவர்களின்
கைகளில் சிக்கிவிடாதே
கவனமாகயிரு...

பள்ளிப்பாட நூல்களை
சுமக்கவேண்டிய உன் கரங்களில்
கலவரச்செய்திகளையும்
மதவாதப் பிரச்சனைகளையும்
சுமந்து வரும்
பத்திரிக்கைகளைத் திணிக்கப்படுவதை
அனுமதிக்காதே
கவனமாகயிரு...

கல்லூரி வாயில்களில்
சில புல்லுருவிகளின்
கோலங்கள்
உன்தோழமைக் கண்ணோட்டத்திற்கு
அவர்கள் அணியவிப்பது
மதவாதக் கண்ணாடி
கண்ணிலியாய்
நீ
உன்வகுப்புத் தோழர்களுடன்
வகுப்பு வாதம் செய்வதற்கு
கவனமாகயிரு...

சமுதாயம் என்றச் சாயத்தில்
உன்னை நிறமேற்றி
உனக்கு ஒருவர்ணத்தை
கொடுப்பதற்கு சிலர்
தருணம் பார்க்கிறார்கள்
உன்னைத் தாரைவார்த்து விடாதே
கவனமாகயிரு...

எங்கோ நிகழக்கூடிய
சில சம்பவங்கள் படமெடுக்கப்பட்டு
உன் சிந்தை அரங்கில்
திரையிடுவதற்கு
திட்டங்கள் தயாராக்கப்படுகிறது
அதை நீ
தீண்டிவிடாதே
கவனமாகயிரு...

தடுக்கப்படுகிறோம்
ஒடுக்கப்படுகிறோம்
நசுக்கப்படுகிறோம்
என்றத் தலைப்புக்களில்
மூலைச்சலவைகள் செய்து
முணைப்போடு

முறச்சிப்பார்கள்
மருள்கொண்டு விடாதே
கவனமாகயிரு...

வேதத்தைக் காண்பித்து
ஞானம் போதிக்கின்றோம்
கலங்கரை விளக்காய்
நேர்வழிக் காட்டுகிறோம்
என்று
மெய்ஞானாம் அறியவேண்டிய
உன்னை
அஞ்ஞானியாக்கிவிடுவார்கள்
கவனமாகயிரு...

மனிதநேயத்தை
நீ
விதையுண்டிருக்கிறாய்
அது துளிர்விடுவதைத் துண்டித்து
தீவிரவாதம் பேசி
சுதந்திரமாய் வாழவேண்டிய உன்னை
நான்கு சுவருக்குள்
சிறைவைத்து விடுவார்கள்
கவனமாகயிரு...

நீ என்பது இன்னொருவனின்
ஆளுமையல்ல
நீ சுயமிக்கவன்
சூத்திரம் நிறைந்தவன்
உன் பலம் தெரியாமல்
உன்னை பலவீனர்களிடம்
ஒப்படைத்து விடாதே
கவனமாகயிரு...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக