வெள்ளி, ஜூலை 17, 2009

கவிக்கோவின் கருத்துரைகள்


துபையில் கிளியனூர் இஸ்மத் எழுதிய மருளில்லா மலர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழாவில்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஆற்றிய உரை…


கிளியனூர் இஸ்மத் அவர்கள் எழுதிய நூல் இப்போது வருகின்ற கவிதைகளிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது
ஆன்மீகமணம் கமழும் நூலாக மருளில்லா மலர்கள் அமைந்திருக்கின்றன.அதுவும் இஸ்லாமிய ஆன்மீகமணம் கமழுகின்ற மலராக அமைந்திருக்கின்றன.எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

சமுதாயத்தில் நடக்கின்ற பல பிரச்சனைகளைப் பற்றியும் அவர் எழுதி இருக்கிறார்.இன்றைக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களைப் பற்றி அதற்கு அறம் வழிகளைப் பற்றி அங்கிங்கு எழுதியிருக்கிறார்.

குறைந்த பட்சம் வயதானவர்கள் தான் தத்துவஞானத்தை எழுதுவார்கள் இஸ்மத்துக்கு எவ்வளவு வயது என்பது எனக்கு தெரியவில்லை.50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தத்துவஞானம் இல்லையென்று சொன்னால் ஏதோ அவர்களிடம் கோளாறு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

வாழ்க்கையை பிரித்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.இறைவனிடம் துவாகேட்கும் போது இந்த உலகத்தின் நன்மையையும் அந்த உலகத்தினுடைய நன்மையையும் எனக்கு அருள்வாய் யா அல்லாஹ் என்று தான் கேட்கிறோம்.இந்த உலகிற்கு சில ஆண்டுக் காலங்களை நாம் ஒதுக்குகின்றோம் ஒதுக்கவேண்டும் அதில் நாம் விதைக்கப்படுகின்றோம்.

சிலர் காலமுழுவதும் உழைக்கிறார்கள் சாகும் வரையில் சம்பாதிக்கிறார்கள் அப்படிபட்டவர்களிடம் கீழான இச்சையே மிகைத்திருக்கும்.சம்பாதிப்பதற்கு ஒரு காலம் உண்டு.அதற்கு பிறகு நாம் யார்…? ஏதற்காக இங்கு வந்திருக்கின்றோம் நம் வாழ்க்கை என்ன..?
என்ற கேள்வி பக்கம் கவனம் செலுத்தாதவன் மனிதன் அல்ல.அவன் கனியாக வில்லை காயாகவே இருக்கிறான் காயாகவே இருந்து இறந்தும் விடுகிறான்.

வாழ்வதின் நோக்கம் என்னவென்றுக் கேட்டால் மனிதன் மனிதனாவதற்காக தரப்படுகின்ற ஒரு வாய்ப்பு. பெரும்பாலும் மனிதனாகாமலேயே இறந்து விடுகிறான்.
ஒரு புதுக்கவிதை நான் படித்த ஞாபகம்

பக்கத்து வீட்டு பரமசிவம்
எம்எல்ஏ ஆனார்
எம்பி ஆனார்
அமைச்சரானார்
ஆனால்
இறுதியில் மனிதனாகாமலேயே
மரணித்து விட்டார்..
இதில் என்ன வியப்பு எனறு கேட்டால் எல்லாப் பதவிகளையும் விட உயர்ந்தது மனிதப்பதவி இதை புரிந்துக் கொள்ள மறுக்கின்றான்.பல உலக பதவிகளுக்கு நாயாக அழைகின்றான்.

உலகிற்கு மனிதனை அனுப்புவதாகச் சொல்லி இறைவன் மிகப்பெரிய பதவியை கொடுத்துதான் அனுப்புகின்றான்.எனது கலீபாக்களை படைக்கப்போகிறேன் என்று இறைவன் யாரைச் சொல்கின்றான் ஆதம் அலைஹிவஸல்லாம்மை பற்றி மட்டுமா சொல்கின்றான்…இல்லை நம்மை எல்லாம் சேர்த்து தான் சொல்கின்றான். இறைவன் தந்திருக்கும் மிகப்பெரிய பதவியை மனிதன் உணர்ந்தவனாக இல்லை.உலக அற்ப பதவிகளுக்கு அலைகிறான்.

இந்த உலகத்தை ஆளுகின்ற மாபெரும் பொறுப்பை அல்லாஹ் கொடுக்கின்றான் ஆளுகின்ற சக்தியை நாம் பெறவேண்டுமென்றால் அதற்கு என்ன வேண்டுமென்று அல்லாஹ் கூறுகிறான்.ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களுக்கு இஸ்முக்களை கற்றுக் கொடுத்தான்.பெயர்களை கற்றுக் கொடுத்தான் அதுமட்டுமல்ல படைப்புகளைப் பற்றியும் படைப்பின் நுணுக்கங்களைப் பற்றியும் அதன் தன்மையென்ன எவை எவைகள் எப்படி இயங்குகின்றன இவைகளை யெல்லாம் கற்றுக்கொடுக்கின்றான்.ஏன் என்று சொன்னால் இவைகளை தெரிந்துக் கொண்டால் தான் கலீபாவாக பிரதிநிதியாக இருந்து ஆளமுடியும்.இது ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களுக்கு மட்டும் தரப்படவில்லை.அவர் காலத்திலேயே தரப்பட்டிருந்தால் செய்யப்பட்டிருந்தால் அவரே கம்பியூட்டரை கண்டுப்பிடித்திருக்க வேண்டும் டிவியை கண்டுப்பிடித்திருக்க வேண்டும் ஆனால் அப்படியா இல்லை…

ஒரு சிப் மாதிரி தயார் செய்து நமக்குள்ளே வைத்துவிட்டான்.
ஓவ்வொரு காலத்திலும் வருபவர்கள் ஒவ்வொன்றாய் கண்டு பிடித்து இந்த பஞ்சபூதங்களையும் ஆள்வார்கள்; அதற்கு அடையாளமாகத்தான் மலக்குகளைப் பார்த்து சஜ்தா செய்யச் சொல்கிறான்.அப்படி என்றால் என்ன அர்த்தம் அவனுக்குள்ளே நான் இருக்கிறேன் என்பது குறிப்பு.
சஜ்தா செய்யச் சொன்னது ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களை அல்ல.
ஊதினானே ஆவி அதனுல் அவன் இருக்கிறான்.ஆகவே நான் உள்ளே இருந்து ஆளுவேன் இவன் நாளை உலகை ஆளுவான் அதற்கு ஆளுகின்ற பொதுக் கட்டளைக்கு கீழ்படியவேண்டும் படிவீர்கள் என்று கூறுகிறான்.

இரத்தம் சிந்தும் கூட்டத்தையா படைக்கிறாய்…? குழப்பம் விளைவிக்கும் கூட்டத்தையா நீ படைக்கிறாய் என மலக்குகள் நினைத்தார்கள்.மனிதப் படைப்புகளிலிருந்து நாங்கள் மேலானவர்கள் எங்களை விட்டு விட்டு எப்படி நீ படைக்கலாம் என மலக்குகள் நினைத்துக் கொண்டார்களே அதற்கு பதிலாக இறைவன் மலக்குகளை அழைத்து இவைகள் எல்லாம் என்ன…? சொல்லுங்கள் என்றான்…
மலக்குகள் எங்களுக்கு தெரியாது என்றார்கள். நீ என்ன சொல்லித்தந்தாயோ எதைக் கற்றுத் தந்தாயோ அதைத் தவிர வேறொன்றும் தெரியாது..என்றார்கள்.
சொந்தமாக கற்றுக் கொள்ளத் தெரியாது ஆனால் மனிதனுக்கு சொந்தமாக கற்றுக் கொள்ளத் தெரியும். மலக்குகளை விட பெரிய ஆட்கள்.
அல்லாஹ் அழைத்தான் ஆதம் அலைஹிவஸல்லாம் வந்தார்கள் இவை என்ன என்று கேட்டான்.ஒவ்வொன்றையும் கடகட வென கூறினார்கள்.
மலக்குகளைப்பார்த்து அல்லாஹ் சொன்னான் இப்பொழுது தெரிகிறதா..?என்று.மலக்குகள் உணர்ந்தார்கள் நம்மை விட பெரிய சக்தி வாய்ந்த படைப்பு மனிதன் என்று.

நீ மனிதனா..? என்று இறைவன் கேட்கிறான் யாரைப்பார்த்து கேட்கிறான் மாட்டைபார்த்தா கேட்கிறான் மனிதனைப் பார்த்து தானே கேட்கிறான்.
நமக்கும் சந்தேகமாக இருக்கு… மனிதனாக பிறக்கும் ஒருவன் வடிவத்தில் மனிதனாக பிறக்கின்றான் கடைசியில் யாராவது ஒருத்தர் மனிதன்னா இவன் தான் மனிதன் என்று சொன்னால் தான் அவன் மனிதன்.
இறப்பதற்கு முன்னாடி யாரையாவது கூப்பிட்டு அவன் கேட்கவேண்டும் நான் யார்…? மனிதனா…!
பலர் மனிதனாக ஆகாதபோது கவிஞராவதெப்படி..இந்த சிந்தனைகள் மனிதனுக்கு வரவேண்டும்.

இந்த சிந்தனைக்கு வருபவர் சாதாரண கவிஞன் அல்ல கவிஞர்களிலிருந்து உயர்ந்தவர்கள் அவர்களை கவிஞானி என்று சொல்கிறோம்.உலகத்தில் அதிகமாக உலக கவிஞர்களால் பாராட்டப் படுகின்றவர்களெல்லாம் ஞானக்கவிஞர்கள் தான்;.

இஸ்லாமிய கவிஞர்களில் கூட ஞானக் கவிஞர்களாக புகழப்படுபவர்கள் யாரென்றால் மௌலான ஜலாலுதீன் ரூமி அவர்கள்.
காரணம் பாரசீகத்தின் கவிஞரல்லவா…!படைபடையாக இருக்கிறார்கள்.ஆனால் மௌலானா ஜலாலுதீன் ரூமி அவர்கள் ஞானத்தினுடைய உச்சத்தின் ஒலியை பிரகாசத்தை கவிதைகளாக வடித்தார்கள்…பிரமிக்க வைக்கிறது. உலகத்தில் எந்த புத்தக கடைக்கு சென்றாலும் மாதத்திற்கு ஒன்று மௌலானா ஜலாலுதீன் ரூமி அவர்களைப் பற்றிய புத்தம் வெளிவருகிறது.இவர்களின் நூலை படித்துதான் இஸ்லாத்தை பலர் நேசிக்கிறார்கள். இன்று உலகம் ஞானக்கவிஞர்களால் தான் பிழைக்கிறது.

அந்த வகையிலே தமிழ்நாட்டில் ஞானக்கவிஞர்கள் மிகக் குறைவு.பழைய ஞானக்கவிஞர்கள் இருந்தார்கள் பீர்முஹம்மது அப்பா குனங்குடி மஸ்தான் சாஹிப் போன்ற ஞானக்கவிஞர்கள் ஏராளமான இலக்கியங்கள் சூபி தத்துவத்தை நமக்கு சொல்லித் தந்தார்கள்.இன்னும் சொல்லப்போனால் சூபிஞானிகள் மூலமாகத்தான் நமக்கு இஸ்லாமே வந்தது.

இறைநேசச் செல்வர்கள் என்று சொல்கிறோமே அவர்களெல்லாம் யார்…? சூபி ஞானிகள்…அவர்கள் மூலமாகத்தான் நாமெல்லாம் சுத்தமடைந்து இன்று முஸ்லீம் என்று சொல்லிக் கொள்கிறோம்…இல்லை யென்றால் எந்த சகதியோடு சகதியாக கிடந்திருப்போமோ…நமக்கு நன்றி வேண்டாமா…? எவ்வளவு சுத்தம் செய்து முஸ்லீம் என்று சொல்லிக் கொள்ள பெருமை கொடுத்துள்ளார்கள்…இப்படிபட்ட ஒரு சேவையை செய்திருக்கிறார்கள்.ஆனால் இடையில் பெரிய இடைவெளி வந்துவிட்டது…
அது எந்தளவு என்றால் கவிதையே ஹராம் என்று சொல்லும்மளவு…
குர்ஆன் கண்டிக்கிறது ஹதீஸ் கண்டிக்கிறது என்று கவிதைகளை படிக்க விடமறுக்கிறார்கள்…குர்ஆனை ஒழுங்காக புரிந்துக் கொள்ள மாட்டேன்கிறார்கள்.

மூன்று கவிஞர்களை ஆஸ்தான கவிஞர்களாக ரசூல் ஸல் அலைஹி வஸல்லாம் அவர்கள் தன் பக்கத்திலேயே வைத்திருந்தார்கள்.மஜ்திலேயே கவிதைகள் அரங்கேற்றிப் படிக்க சொன்னார்கள்..கவிஞர்களுக்கு பொன்னாடை போர்த்துவதை ரசூல் ஸல் அலைஹி வஸல்லாம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.

கவிதைகளில் ஞானம் வெளிப்படுகிறது என்று பெருமானார் (ஸல் அலை) அவர்கள் கூறிய ஹதீஸ்பல இருக்கிறது…இதைப்பற்றி பேசவேண்டுமானால் நேரம் போதாது நான் இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லவேண்டி இருக்கிறது.

கவிஞர் கிளியனூர் இஸ்மத் அவர் எழுதிய கவிதை நூலில் ஏகத்துவ மெய்ஞான சபை என்ற தலைப்பிட்ட கவிதையில் கூறுகிறார்.

மதமற்ற மதமாகிய
மெய்ஞானத்தை
சுவைப்பவர்கள்
என்கிறார்
ஞானம் என்ன செய்கிறது என்றால் கீழ்நிலையில் மதமுற்று இருப்பதை வெளியில் கொண்டு வருகிறது. அகண்ட உண்மை என்ற ஒரு மாபெரும் சக்தியை திரட்டுகிறது. ஞானிகளில்
இஸ்லாமியஞானி கிருத்துவஞானி இந்துஞானி என்று வித்தியாசம் கிடையாது. உண்மைக்கு வித்தியாசம் கிடையாது.
அதேபோல் இன்னொரு இடத்தில் கூறுகிறார்

இவர்கள்
ஞானம் பயில்வது
ஞானியாவதற்கல்ல
மனிதனாக வாழ்வதற்கு
என்கிறார்
ஞானியாகி காட்டுக்கு போய்விடுவதற்கல்ல. நாம் யார் என்று தெரிந்தால் மனிதனாகலாம். மனிதனாவதற்கு ஞானம் உதவுகிறது என்று கவிஞர் இஸ்மத் அழகாக கூறுகிறார்.
அடுத்து ஒரு கவிதையில்
மனிதா நீ என்பது யார்…?

நான் இவ்வளவு பேசினேனே அதை சாராக பிழிந்து கவிஞர் பேசுகிறார்.
மனிதா
உன்னை மனிதனென்று நீ
என்றாவது உணர்ந்ததுண்டா…?
உணர்வதற்குரிய வாய்ப்பு
உனக்கு
கிடைத்ததுண்டா…?

பூமியில் இந்த உலக வாழ்க்கையிலே நாம் நம்மைபற்றி உணர நேரம் கிடைக்க வில்லை. சாப்பிடுகிறோம் பொருள் தேடுகிறோம் மீண்டும் சாப்பிடுகிறோம் பொருள் தேடுகிறோம் கிட்டதட்ட இயந்திர தனமான வாழ்ககை. மனிதன் பொருள் தேடிக்கொண்டே இருக்கிறான் அவன் இறக்கும்வரையில். பொருள் தேடக்கூடாது என்பதல்ல அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறது…வாழ்க்கை முழுமையும் அதற்காக சிலவு செய்யக் கூடாது.
அடுத்த வரியில் இஸ்மத் கூறுகிறார்
படைக்கப்பட்ட நீ
உன்னைப் பற்றி
தெளிவில்லாத போது
உன்னைப் படைத்த
இறையை நீ
எப்படி தெளிவாய்
விளங்கிருப்பாய்…
மிக பயங்கரமான கேள்வி இது
பெரிய மனிதன் மாதிரி இவன் தத்துவம் பேசுகிறான் பழகுகிறான் முதலில் நீயாரென்று தெரியுமா உனக்கு…? நீ யாரென்றே தெரியவில்லை உன்னைப் பற்றி விளக்கமில்லை நீ இறைவனைப்பற்றி எப்படி விளங்கிருப்பாய் என்று ஆணித்தரமாக கேட்கிறார்.
அதனால்தான் இறைவனைப் பற்றிய கருத்துரைகள் மனிதனிடம் தவறாக இருக்கிறது அதைப்புரிந்துக் கொள்வது கடினம்.
அடுத்த வரியில் கூறுகிறார்
மனிதா
மதத்தை நேசிக்குமளவு
மனிதர்களை
உனக்கு வாசிக்க தெரியவிலை;லை
நேசம்
மதத்திற்கு தேவையில்லை
மனிதனுக்குத் தேவை…
என்கிறார்.
இன்றைய்ய நிலையில் மதம் என்றால் கெட்டவார்த்தையாக மாற்றி விட்டார்கள். ஒருவரை யொருவர் இகழ்வது பகைப்பது அழிப்பது …இது தான் இன்றைக்கு மதம்.
மதம் மனிதனை மனிதனாக்கும் பட்டரை என்கிறார்
இதை புரிந்துக் கொண்டால் மதக்கலவரம் ஏற்படாது. ஏந்த மதமும் இன்னொரு மதவாதியை பகைக்க சொல்லவில்லை மனிதர்களை மனிதர்களாக்குவது தான் மதத்தினுடைய்ய வேலை.அப்படி இல்லாமல் ஒருவரை யொருவர் பகைவர்களாக ஆக்குகிறது என்று சொன்னால் கோளாறு மதத்தில் இல்லை மனிதனிடம் தான் அவன் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை.
நல்ல தருணத்தில் ஒரு சிறந்த நூலை நல்ல சிந்தனையுடன் கவிஞர் கிளியனூர் இஸ்மத் வெளியிட்டிருக்கின்றார்.
இஸ்மத் அவரை வாழ்த்துகின்றேன் இன்னும் மென்மேலும் நல்ல ஆன்மீக கவிதைகளை நலமாக படைத்து மனிதர்களுக்கு உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன என்று புரியவைத்து ஒவ்வொருவரையும் உயர்த்துகின்ற மாபெரும் கடமையை அவர் தொடர்ந்து செய்திடவேண்டி வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி…!

1 கருத்து: