பிரமசாரிகள்…
வாழ்க்கை
பிரமசாரத்திலிருந்து
துவக்கம்…
திருமணங்கள் அமைவதெல்லாம்
மனங்கள் தேடிய வரம்…
வாழ்க்கை
சிலருக்கு பிரமை
பலருக்கு பிரமாதம்…
வாழ்க்கைப் பயணத்தை கடப்பதற்கு
திருமணமாகி சிலர்
பிரமசார வேடத்தில்
பயணம்…
கரம் நம்பி
கரைக்கடந்தோம்
நம்பிக்கைகளில்…
நினைவுகள்
நித்தமும் நித்திரைக்கு முன்
மன அரங்கில் ஒடும்
திரைப்படம்…
தொலைபேசியில் தொடரும்
வாழ்க்கை நிகழ்வுகளின்
வரைபடம்…
பிறந்த குழந்தையை
அள்ளிஎடுத்து
நெஞ்சோடு அணைத்து
முகர்ந்து முத்தமழை
பொழிவது
நிழற்படங்கள்…
பொருள் சேர்க்க
பொறுமையுடன் காத்திருக்கும்
வெறுமை வாழ்க்கை…
உணர்வுகளும்
உணர்ச்சிகளையும்
முடிச்சுப்போட்டு வைத்திருக்கும்
முந்தானைகள்…
நாங்கள் விடும்
மூச்சு காற்றுக்கும்
கொடுக்கப்படுவது
வாடகை…
நாட்டைகாக்க
இராணுவவீரர்கள் எல்லைகளில்
வீட்டைக்காக்க
எல்லைத் தாண்டி
நாங்கள்…
தாயகம் திரும்பும்
விடுமுறைகளில்
தாகமில்லை
தாழமுமில்லை
வீடு சேரும் வரையில்
மனமெல்லாம்
மின்னிடும் விண்மீன்கள்…
பொருளை சம்பாதிக்க
இளமையை சிலவளித்தோம்
இளமையை சம்பாதிக்க
எதை சிலவு செய்வது…?
இது எங்களின்
சோகக்கதை அல்ல
வாழ்க்கை கதை…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக