புதன், செப்டம்பர் 24, 2008

7.போராட்டங்கள்

போராட்டங்கள்

உரிமைக்காக வேண்டி
உண்ணா விரத
போராட்டம்…

ஊதிய உயர்வுக்காக
வேலை நிறுத்தம்
போராட்டம்…

சிலையை
சீண்டியதால்
சாலை மறியல்
போராட்டம்…

சீலை வாங்கி
தராததால்
தாரம் செய்யும்
போராட்டம்…

ஆசிரியர்;
அதட்டியதால்
மாணவர்களின்
போராட்டம்…

ஏழைகளுக்கு
பசியோடு
போராட்டம்…

எல்லைகளில்
நாடுகள் செய்யும்
போராட்டம்…

குடும்பங்களோடு
குழந்தைகளோடு
ஊரோடு
உறவோடு
சமுதாயத்தோடு
சாதிகளோடு
இப்படி
தொடரும்
போராட்டங்கள்…

போராடி போராடி
பொங்கியது
நம் வாழ்க்கையில்
பல வெற்றிகள்
தோல்விகள்…

போராடினால்
வெற்றி நிச்சயம்
என்பது
அனுபவம் தரும்
அனுகூலம்…

பொருளுக்காக
பெருமைக்காக
பதவிக்காக
புகழுக்காக
போராடி விளைந்த
வெற்றி -அது
கானல் நீரை
தாகத்தோடு
காண்பதைப்போல்…

போராட்டம்
மனித வாழ்க்கைக்கு
அளிப்பது
நீரோட்டம்…

நம்
எண்ணங்களோடும்
மனதோடும்
போராடி
போர்க் கொடி
உயர்த்துவதே
உண்மையான
போராட்டம்…
பொறாமைகளோடு
பொய்களோடு

புறம் பேசுவதுகளோடு
ஏமாற்றுதல்களோடு
நய வஞ்சகங்களோடு
களவுகளோடு
பிணக்குகளோடு
பித்தலாட்டங்களோடு

தீமைகளோடு
தீவிரமாய்
போராடி
எண்ணங்களை
பதியம் போட்டால்
பூத்து குலுங்கும்
மனமெல்லாம்
நல்லெண்ணம்
நந்தவனம்…

அந்த பூவணத்தில்
பூத்தவர்களே
சாந்தி நிறைந்த
சம்பூரண மனிதர்கள்…

இதை தான்
‘இஸ்லாம்’
கூறுகிறது
‘நப்ஸ்’சுடன் போராடுவது
‘ஜிஹாதுல் கபீர்’…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக