புகழை புகழ் பாடுவோம்…
மது மாது மதி மயக்கம்
மிருகத்தையும் விட
கேடு கெட்ட நிலையில் வாழ்ந்தவர்களை
மனிதனாக வாழவைத்த
மனிதருள் மாணிக்கம்
நபிகள் நாயகம்…
அல்லவா...
இன்னல்கள்
வாழ்க்கையில் பின்னல்கள்
எதிர்நோக்கும் போதெல்லாம்
இறைவா இறைவா என்று
இறைஞ்சல்கள்
அந்த இறையை காட்டி தந்த
உத்தமர்
நபிகள் நாயகம்…
அல்லவா...
அமைதி இழப்பு
அவதிப்படும் உள்ளம்
மனம் ஆறுதல் தேட
‘அல்லாஹ்’வை நினைவு கூற
ஐங்காலத் தொழுகை
வாடிய மனதை மலரச்செய்த
வள்ளல் பெருமான்
நபிகள் நாயகம்…
அல்லவா...
எப்படியும் வாழலாம் என்பது
வாழ்க்கையன்று
இப்படித்தான் வாழ்க்கை என்று
சீறும் செம்மையும்
செப்பனிட்ட தளமாய்
அதுவே ‘ஷரிஅத’; என்ற களமாய்
அமைத்து தந்த பெருந்தகை
நபிகள் நாயகம்…
அல்லவா...
அகிலத்தின் ஆரம்பம்
அதன் முடிவு
‘வஹி’ என்னும்
வேத வெளிப்பாட்டில் முழுமை
அதை
உள்ளத்தில் உறையச்செய்யும்
திருக்குர்ஆன்
அதை பயின்றவர்கள்
‘ஹாபிஸ் ஆலீம்’களாய்
அகிலத்திற்கு அடையாளம் தந்த
அருளானவர்கள்
நபிகள் நாயகம்…
அல்லவா...
பெயருக்கு முன்னால்
‘ஹாஜி’ என்ற பட்டம்
இதை நாம் சுமப்பதற்கு
கல்லடியும் சொல்லடியும்
தன் தேகத்தில் கண்ட
கருணைக்கடல்
நபிகள் நாயகம்…
அல்லவா...
‘சூர்’ ஊதி அகிலங்கள் அழிக்கப்பட்டு
ஜீவராசிகள் மடிந்து
இறைவணக்கம் அற்றுப்போகும்
அந்நாளில்
இறைவன் அவனது மலக்குகள்
‘ஸலவாத்’ என்னும்
நபிகள் நாயகத்தின்
திரு புகழை
அணையாத அகலாய்
அட்சயபாத்திரமாய் பாடும்
மாட்சிமை மிக்க
நபிகள் நாயகம்
நமக்கு சாதாரண மனிதரா…?
அகிலப் படைப்பே
அண்ணல் பெருமானாரின்
அவதாரம்.
‘அல்லாஹ்’ அறியத்தரும் அண்ணலை
புகழ்வது
இணைவைத்தலா…?
படைத்தவன் புகழும் போது
படைக்கப்பட்ட நம்மிடம்
ஏன் இந்த பாரபட்சம்…?
பஞ்சு மெத்தையில்
பட்டு விரிப்பினில்
கட்டியணைத்த நம் மனையாளை
மானே தேன்னே மயிலே குயிலே
சந்திரனே சூரியனே
வண்ணமலரே வாடாமல்லிகையே
இப்படி
அற்ப சுகத்திற்கு
நாம் அள்ளிவிடும் வார்த்தைகள்
இறைக்கு
இணைவைத்தல் இல்லையா…?
அரசியல் தலைவர்கள்
அலுவலக மேலாளர்கள்
பதவிக்காக பொருளுக்காக
பரவசத்தோடு புகழ்வதும்
பெயருக்காக புகழுக்காக
நம்மை சார்ந்தவர்கள்
நமக்கு சம்பந்தபட்டவர்கள்
வார்த்தைக்குள் வராத வார்த்தைகளால்
புகழ்மாலை சூட்டுவதும்
இணைவைத்தல் இல்லையா…?
நமது பெற்றோரும்
நமக்கு கற்பித்தவரும்
சாதாரண மனிதரா
மெய்ஞ்ஞானியும்
விஞ்ஞானியும்
சாதாரண மனிதரா
நாட்டின் பிரதமரும்
மருத்துவரும்
சாதாரண மனிதரா…?
அறிவு படித்தரத்தில் நம்மிடம்
ஆழமான வித்தியாசங்கள்
நம்மை நாம் அறியாத நிலையில்
அகிலத்தின் அருட்கொடை
சத்திய சீலர்
சாந்த நபிகளை
நம்மோடு சரிசமம்
என்பது சரிதானா…?
அறிவின் தந்தை என்று தன்னை
ஆரத்தி எடுத்தவன் ‘அபுஜஹில்’
அவன் முட்டாள்களின் தந்தையான
சரித்திரம் நம் கையில்…
வரிந்து கட்டியவரெல்லாம்
வழுக்கி விழுந்து
மண்ணைக் கவ்விய வரலாறுகள்
நம் வாசிப்பில்…
அதனால்
அண்ணல் நபிகள் சாதரண மனிதரும் அல்ல
அவர்களை புகழ்வது
இணைவைத்தலும் அல்ல…
சாதாரணமும் இணைவைத்தலும்
சத்தியம் விளங்காதவர்களுக்கே…
அதனால்
தூசிகள்;என்றுமே சூரியனை
மறைக்க முடியாது…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக