புதன், செப்டம்பர் 24, 2008

22.அறிவைத்தேட குருவை நாடு

அறிவைத் தேட குருவை நாடு…


குரு அவசியமா?

குழப்புகிறது ஒரு கூட்டம்
குறுகிய நோக்கத்தில்
குர்ஆனை படித்து விட்டு
குறுக்கு வழியில் வந்த
குதர்க்கவான்கள்
இவர்கள்…

ஹதீஸை
அலசி விட்டோம்
அதனால்
அண்ணல் பெருமானார்
எங்களுக்கு
அண்ணன் என்று
சொல்லும் இவர்கள்…

சரித்திர நாயகர்கள்
இவர்களுக்கு
சாதாரண மனிதர்கள்…

சத்திய மறியாத
சாதாரண மனிதனுக்கு
சரித்திர நாயகர்களும்
சர்வமும் இவர்களுக்கு
சாதாரணம் தான்…

குரு என்பது
மனித வழிபாடல்ல
மனிதனை மனிதனாக
வாழவைக்கும்
வழிக்காட்டல்…

அறிவை
அறிவைக் கொண்டு
அறிய வேண்டுமென்ற
தத்துவத்தை-நாம்
அறிந்திருக்கிறோமா.?


சம்பூரண மார்க்கத்தை
பூரணமாகப்பார்ப்போம்
இமையை மூடினால்
இம்மை இல்லை என்ற
பூனைக் கதையை
பூரணத்தில் புகுத்தலாமா?

உலகத்தை
உரசியிருக்கலாம்
ஆகாயத்தை
அலசியிருக்கலாம்
ஆனால்
நம்மை நாம் அறியாத போது
நம் உள்ளம் இருள்…

பிறப்பிலிருந்து
இறப்பு வரையில்
குருவின்
தொடர்பு…

பிறப்பதற்கும்
வளர்ப்பதற்கும்
பெற்றோர்கள்
குரு…

பள்ளிச் சென்று
பயிலும் போது
ஆசான்
குரு…

பள்ளி வாசல் சென்று
பலருடன் தொழும் போது
இமாம் குரு…

நம்மை
இயக்குவதற்கும்-நாம்
இயங்குவதற்கும்
இருக்கிறது
குருவின் இலக்கு…

அரிச்சுவடி
அறிந்து விட்டதினால்
கல்லூரிக்கு
ஆசான்
தேவையில்லை யென்று
கூற முடியுமா நம்மால் ?

அது முடியாத போது

அல்லாஹ்வின்
வேதத்தை
ஆசானின்றி அறிய
நினைப்பது
அல்லாஹ்வை அறிய
ஆசான்
தேவை யில்லை-என்று
கூறுவது
ஆதாரமாவது எப்படி.?

பிறக்கும் போது
சம்பூரணத்தையறிந்து
பிறந்து விட்டோமா.?

ஆகாயத்தை நோக்கி
உமிழும் உமிழ் நீர்
நம் முகத்திலேயே
உதிர்ந்துக் கொண்டிருக்கிறது
உணர்வோம்…

அனைத்திலும்
அனைத்துமாயிருக்கிறான்
அல்லாஹ்…

ஆகாயத்தை மட்டும்
பார்த்துக் கொண்டிருப்பதால்
ஆதாரமாகி விடாது…

ஆதாரத்திற்கு
ஆதாரம் தேடுவதை விட்டு
ஆணவத்தை
அறுத்தெறிந்து
அறிவைத்தேடுவோம்
அறிவைத் தேட
சற் குருவை நாடுவோம்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக