புதன், செப்டம்பர் 24, 2008

21.இறையறிவே இறுதியறிவு

இறை அறிவே இறுதி அறிவு …!


இறைவா
நீ எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்
எது வாக இருக்கிறாய்
உன் இருப்பிலே எனக்கு
குழப்பம்…

ஏழு வானங்களுக்கு மேல்
அர்ஷிலே
ஆட்சியமைத்திருப்பதாய்
கூறுகிறாய்…

‘உன் பிடரியின்
நரம்பிற்கும் மிக சமீபமாய்
இருக்கிறேன்
கூப்பிட்ட குரலுக்கு
பதிலளிக்கிறேன்’
என்று
உன் வேதத்தில்
வாதம் செய்கிறாய்…

எத்தனையோ
கஷ்டங்களில்
நஷ்டங்களில்
அழுகின்றேன்
உன்னை அழைக்கின்றேன்
என் குரலுக்கு
உன்னிடம் பதில் இல்லை
ஏன்…?

இறைவா
தெளிவான
வேதம் தந்தாய்
அறிவான
ஆசான் தந்தாய்
விரிவான
விளக்கம் தந்தாய்
அதை
விரித்து பார்க்க
என் விழி
வழிச் செல்ல வில்லையே…

பாவியாய்
உன் வேதத்தை படித்து
கொண்டிருப்பதால்
பார்வையிலும்
நீ யிருப்பதை
பார்க்காத
எனதறிவில்
உனை
எங்கேயோ
வைத்து விட்டது
என் எண்ணம்…!

இறைவா
கண்களால் காணமுடியாத
பரம் பொருளாயிருக்கிறாய்
அறிவிலே உனை
அலசும் போது
அறிவாகி
புறக்கண்களுக்கும்
ஆளுமையாய்
காட்சியளிக்கிறாய்...
உனை
விளங்கும் போது
ஒளியிலும் புரிகின்றேன்
விளங்காத போது
இருளாய் மட்டுமே
பார்க்கிறேன்…

அகிலத்தின்
அருட்கொடை
அண்ணல் எம்பெருமானாரை
நேசித்தால் தான்
இறைவா
உன்னின் உண்மை
என் அறிவுக்குள் உலாவரும்…

உயர்வான உன் வேதம்
உம்மி நபியின்
உரைப்பினால்
உயிர் வாழ்கிறது
இறைவா…

உன்னுடைய
ஆட்சியையும்
ஆளுமையையும்
நீ நிகழ்த்தும்
அதிசயங்களையும்
அறிந்து விடுவதினால்
நான் உன்னை
அறிந்ததாய் ஆகிவிடுமா…?

இந்த பிரபஞ்சத்தை
படைப்பதற்கு முன்
நீ மட்டுமே இருந்தாய்.
படைப்புகளை
படைத்துப் பார்க்க
உனக்கு ஆசை
‘குன்’-என்று சொல்லி
அனைத்தையும் படைத்து
அனைத்துமாகி விட்டாய்
என்னிலிருந்து
உன்னை
எப்படி
வேறுபடுத்தமுடியும்.
அது
மாறுபாடல்லவர்

உன்னை என்னிலும்
என்னை உன்னிலும்
காணவில்லையெனில்
இணை வைத்துவிட்டேன்
இறைவா
உனக்கு
இணை வைத்துவிட்டேன்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக